பணமின்றி அசையாது உலகு 08: விலைவாசியை சமாளிக்க கொஞ்சம் ரிஸ்க் தேவைதான்

பணமின்றி அசையாது உலகு 08: விலைவாசியை சமாளிக்க கொஞ்சம் ரிஸ்க் தேவைதான்
Updated on
2 min read

வெளியூரில் வசிக்கும் கல்லூரிகால நண்பன் ரவிக்குமார். அவன் வீட்டிற்கு போகக் கிளம்பினேன். பல ஆண்டுகளுக்குப் முன்பு அடிக்கடி போயிருந்தாலும் இப்போது அவன் வீட்டை கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. அவ்வளவு மாற்றங்கள்.

அந்தக் காலத்தில் அந்த வீடுதான் அந்த தெருவிலேயே பெரிய வீடு. இப்போது அந்த தெருவில்பல புதிய வீடுகள், சில அடுக்ககங்கள் வந்துவிட்டிருந்தன. அந்த வீடு மற்ற புதிய, பெரிய கட்டிடங்களுக்கு நடுவில் சிறிதாகத் தெரிந்தது.

நல்ல வேளையாக துருப்பிடித்து, ஆங்காங்கே உடைந்திருந்த மயில் உருவம் பொறித்த கம்பி கேட் அடையாளம் காட்டியது.அதை தள்ளிவிட்டு உள்ளே போக எத்தனித்தபோது கொஞ்சம் தடுமாறிவிட்டேன். காரணம், படியில் இறங்குவது போல இரண்டடி தாழ்வாக இருந்த வீட்டின் முன்தரை. அது தெரியாமல் சாதாரணமாக காலை எடுத்து வைத்ததால் உண்டான தடுமாற்றம்.

சாலையில் இருந்து இரண்டு படிகள் உயரத்தில் இருந்த வீட்டின் அதே பழைய தரைதளம்தான். ஆனால், தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக சுரண்டாமல் திரும்பத் திரும்ப போடப்பட்ட தார் சாலையால், சாலையின் உயரம் கூடி, வீடு கீழே இறங்கிவிட்டது போலாகிவிட்டது.

ரவிக்குமார் மட்டும் வீட்டில் இருந்தான். பலவற்றையும் பேசினோம். கல்லூரி காலம் குறித்தும் பேசி சிலாகித்தோம். தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டைக்கு PTC பேருந்து கட்டணம் 10 பைசா. ஆட்டோரிக்ஷாவுக்கு மினிமம் சார்ஜ் 35 காசு. டாக்ஸிக்கு 70 காசு. அளவு சாப்பாடு 90 காசு, திரையரங்க டிக்கெட் விலைகள் என அப்போதைய குறைந்த விலைவாசி குறித்து பேசி வியந்தோம்.

“ஆனா இப்ப எல்லாத்துக்கும் என்ன விலை பாத்தியா?” என்றான் ரவிக்குமார்.

“அது சரி. ஆனா, அப்பவெல்லாம் மக்களுக்கு என்ன சம்பளம், இப்ப என்ன சம்பளம்?இதுவும் கூடியிருக்கில்ல?”நான்.

“நல்லா கூடுச்சு போ. விலைவாசி கூடுன அளவா சம்பளங்கள் கூடியிருக்கு?” அவன்.

சில வினாடிகள் யோசித்த பின் நான் சொன்னேன் ‘‘ஆமா. நீ சொல்றது சரிதான். சிலருக்கு நல்லா கூடியிருக்கு. வேறு சிலருக்கு ஓரளவுதான் அதிகரிச்சிருக்கும்”

“அப்படிப்பட்டவங்களுக்கு சிரமம்தானே?”

“எப்படி? உங்க வீட்டு வாசல் மாதிரியா?”

“என்னடா சொல்ற?”

“பழசை சுரண்டி எடுக்காம, ஒண்ணு மேலஒண்ணா போட்டிருக்கிற உங்க ரோடு மாதிரிவிலைவாசி உயர்ந்துகிட்டே போகுது. ஆனா,அதற்குத் தகுந்தாப்ல வருமானத்த அதிகரிச்சுக்காதவங்க நிலைமை, மாற்றி கட்டாத உங்க வீடு மாதிரி, அப்படியே இருந்தாலும் தாழ்வு ஆயிடுச்சு. தடுமாற வைக்குது”.

“என்ன கிண்டலா?”

“இல்லடா. எதார்த்தம்”.

“ஐயா எனக்கு நல்ல வேலை கிடைக்கல. என் முதலாளி கொஞ்சம் கொஞ்சமாத்தான் சம்பளத்தை ஏத்துறாரு. நான் என்ன செய்யமுடியும்?”

“கிடைச்சதுல சேமிச்சு ஆரம்பத்திலருந்தே சரியா முதலீடு செய்திருக்கணும்”

“செய்திருக்கேனே”

“குட். அந்த முதலீடுக்கு வருமானம் வருதில்ல? சம்பளத்தோட அதையும் சேர்த்துப் பாரு”

“என்ன பெருசா வருமானம் வருது? தேஞ்சுபோன பேங்க் வட்டி 7 பர்சென்ட் ”

“பேங்க் தவிர வேற ஏதிலயாச்சும் முதலீடு செய்திருப்பல்ல?””

“ஹூஹும். வேற எதை நம்பமுடியும் சொல்லு. மிடில்கிளாசுகு சேஃப்டிதானே முக்கியம்?”

“ஹலோ நமக்கு வேண்டிய ஒரு பொருளைஎடுக்க, நம்ம போட்டியாளர் பஸ்ல போய்க்கிட்டு இருக்கார்ன்னு வச்சுக்க”

“சரி”

“நாம் அவரை முந்திப் போய், அதை எடுக்கணும்னா என்ன செய்யனும்?”

“என்ன செய்யனும்?”

“அவர் போற வண்டி வேகத்தைவிட கூடுதல் வேகமா போற வண்டியில நாம் போகணும்.பைக் அல்லது கார் மாதிரி..”

“புரியல”

“ரவி, விலைவாசி சராசரியா வருஷத்துக்கு 7% உயருதுன்னு தெரியுது. அப்ப நாம செய்யுறமுதலீடுகள் அந்த 7சதவீதத்தைவிட அதிக வருமானம் தந்தாத்தான், நம்மளால விலைவாசியையும் தாண்டி, சவுகர்யமா வாழ முடியும்”

“இல்லன்னா?”

“ஒரு உதாரணம் சொல்றேன். லட்ச ரூபா சேர்த்து பேங்குல 7.5 % வட்டிக்கு போட்டுவச்சா, 10 வருஷம் கழிச்சு என்ன கொடுப்பாங்க?

“நீயே சொல்லு”

“2 லட்சத்து 10 ஆயிரம் கிடைக்கும். அதே சமயம் 10 வருஷத்தில விலைவாசி எவ்வளவு கூடியிருக்கும்?”

“இப்ப கூடிக்கிட்டு இருக்கிற அளவை வச்சுப் பார்த்தா, அதைவிட அதிகமாத்தான் இருக்கும்”

“அதனால 10 வருஷத்துகெல்லாம் முதலீடு செய்யனுமின்னா சராசரியா வருஷத்துக்கு 10, 12 சதவீதத்துக்கு அதிகமா வருமானம் வர்ற மாதிரி ஒரு பகுதி பணத்தையாவது முதலீடு செய்யனும்”

“ஏழரை, எட்டு சதவீதத்துக்கு மேல வருமானம் வேணும்னா, அந்த முதலீடுகள்ல ரிஸ்க் இருக்குமில்லப்பா?”

“இருக்கும்தான். போஸ்ட் ஆபீஸ்ல, பேங்க்ல, NBFC-களில் மற்றவர்களுக்கு கொடுக்கிற வட்டி விகிதத்தைவிட 60 வயதுக்கு மேலான சீனியர் சிட்டிசன்களுக்கு 0.5% வரை கூடுதல் வட்டி தராங்க. ஏன் தெரியுமா?”

“சொல்லு”

“60 வயசுல பணி ஓய்வு. வேலைக்குப் போகமாட்டாங்க. சம்பளம் வராது. அவர்கள் கையில் இருக்கிற சேமிப்பில் இருந்து கிடைக்கிற வருமானம்தான். அப்படிப்பட்டவர்கள் ரிஸ்க் எடுக்கக் கூடாது. அதனால கொஞ்சம் கூடுதல் வட்டி. ஆனால் ஐம்பது வயசுக்கு குறைவா இருக்கிறவங்க கொஞ்சம் ரிஸ்க் இருந்தாலும் ஓரளவு முதலீட்டுக்காவது கூடுதல் வருமானம் வர்ற மாதிரி முதலீடு செய்யனும்”

வயதான பிறகு முதலீடுகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் நிச்சயத்தன்மை வேண்டும். ஆனால் சம்பளம் வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் சேமித்து செய்யும் முதலீட்டில்இருந்துவரும் வருமானம் அப்போதைய காலத்திற்கானது அல்ல. அந்த வருமானம் உடனடிநுகர்வுக்கு அல்ல. அவை பிற்கால தேவைகளுக்கான ஏற்பாடு. எனவே காத்திருக்க முடியும்.

உடனடியாக தேவைப்படாத, நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய வாய்ப்பிருக்கிற பணத்தை கொஞ்சம் ரிஸ்க் எடுத்தாவது கூடுதல் வருமானம் வருவது போல முதலீடு செய்ய வேண்டும். அது நிலமாகவோ, பரஸ்பர நிதிகளாகவோ அல்லது நிறுவனப் பங்குகளாகவோ இருக்கலாம்.

- writersomavalliappan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in