

அது, 1980-களின் பிற்பகுதி. அப்போது அவனுக்கு வயது 23 இருக்கலாம். அவன் கல்லூரி நண்பர்களில் எவருக்கும் வேலைகிடைத்திருக்கவில்லை. முதலில் அவனுக்கு வேலை கிடைத்தது. சென்னையின் அப்போதைய புறநகர் பகுதியில் இருந்த தொழிற்சாலையில் வேலை. மாத ஊதியம், ஆயிரத்துக்கும் சில பத்து ரூபாய்கள் மட்டுமே குறைவு. நிறைவான சம்பளம்.
திருமணம் ஆகவில்லை. அவன் வீட்டில்இருப்பவர்கள் அவனிடம் பணம் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அவனாக பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தி சம்பளத்தில் ஒரு பகுதியை பெற்றோரிடம் கொடுத்தான்.
சென்னையில் இருந்து தினசரி சில மணி நேரங்கள் பயணம் செய்வதைவிட, புறநகர் பகுதியிலேயே தங்க முடிவு செய்தான். திருமணம் ஆகாத சில ஊழியர்களுடன் ஒரு வீட்டில் தங்கிக்கொண்டான்.
நிறுவனத்தின் உணவகத்தில் குறைந்த விலையில் உணவு. பகிர்ந்து கொண்ட அறைக்கு மிக சொற்பமான வாடகை. இவை எல்லாம் போக, ஒவ்வொரு மாதமும் அவனிடம் சில நூறு ரூபாய்கள் மிஞ்சியது.
கல்லூரி படிப்பு முடித்ததும் கிடைத்த வேலை என்பதால் கையில் கிடைத்த பணத்தைக் கொண்டு எதை வேண்டுமானாலும் எவரையும் கேட்காமல் வாங்கலாம் என்ற நினைப்பு பெருமகிழ்ச்சி கொடுத்தது. ஒவ்வொரு மாதமும் அவன் கையில் மிகுந்திருந்த பணம், அவன்விருப்பம் போல செலவு செய்ய அனுமதித்தது.
செலவு செய்தான். ஞாயிறுதோறும் சென்னை போய்விட்டான். நண்பர்களோடு திரையரங்குகள், உணவகங்கள் என நேரத்தையும் பணத்தையும் செலவு செய்தான். சந்தோஷமாய் போனது பொழுது. அவன் பெயரை சுருக்கி சொல்லி ‘அவன் பார்த்துப்பான்’ என்று மகிழ்ந்தார்கள் நண்பர்கள்.
மாதத்தின் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, அவ்வப்போது வரும் பொதுவிடுமுறைகள் போன்ற நாட்களிலும் நண்பர்கள் காத்திருந்தார்கள். போனான். சம்பளப் பணம் தீரும் வரை செலவு செய்தான்.
ஆண்டுக்கு ஒரு முறை போனஸ் கொடுத்தார்கள். அவ்வளவு பணம் ஒன்றாக கிடைத்தால் செலவு செய்ய முடியாதா என்ன? பெற்றோருக்கு துணிமணிகள், தனக்கு சட்டை பாண்டுகள், ஷூ, கூலிங் கிளாஸ் என கொஞ்சம் பெரிய தொகைகளாகவும் செலவு செய்து மகிழ்ந்தான். ஒன்று இரண்டு மாதங்களில் போனஸ் பணமும் முடிந்துவிடும்.
அவனோடு அந்த அறையில் தங்கியிருந்த நண்பர்களில் இருவர், அவர்கள் அறைஇருந்த வீட்டுக்கு சற்று தூரத்தில் விற்பனையாகிக் கொண்டிருந்த மனைகளை வாங்குவது குறித்து அடிக்கடி பேசியவை அவன்காதில் விழுந்திருக்கிறது. அந்த மனைகளின் விலைகள் குறித்தும் அவர்கள்பேசிக்கொண்டார்கள். அவன் அவற்றையெல்லாம் கவனித்தது இல்லை. அவன் நினைப்பெல்லாம் அடுத்து எப்போது விடுமுறை வரும், எப்போது அவர்களுடன் வெளியே போகலாம் என்பது குறித்துதான்.
பிறகு வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான். குடியிருப்பையும் மாற்றினான். சமீபத்தில், வேறு வேலை காரணமாக முன்பு வேலை செய்த அந்த நிறுவனம் இருக்கும் அந்த புறநகருக்குப் போகவேண்டிவந்தது.
அதிசயித்துப் போனான். 35ஆண்டுகளில் அன்றைய புறநகர் சென்னை நகரின் ஒரு பகுதியாக மாறிவிட்டிருந்தது. சில புதிய தொழிற்சாலைகள் வந்திருந்தன. அவன் முன்புதங்கியிருந்த வீட்டின் அருகே போடப்பட்ட மனைகளின் தற்போதைய விலை என்ன என்று விசாரித்தான்.
அங்கேயெல்லாம் இப்போது 2,400 சதுர அடிமனைவிலை ஒரு கோடி ரூபாய் என்றார்கள். மேலும், கிடைப்பதில்லை என்றார்கள். தற்போது அவன்சென்னையில் குடியிருக்கும் வாடகைவீட்டை நினைத்துக் கொண்டான். உடன் 2 விஷயங்கள் அவன் நினைவுக்கு வந்தன.
ஒன்று, அவன் அந்த வேலையில் இருந்தபோது, அவனுடன் தங்கியிருந்த சக ஊழியர்கள் வாங்கிய மனைகளின் விலை ரூ.1,800 என்பது. ஆம். வெறும் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் மட்டுமே. இரண்டாவதாக அவனுக்கு நினைவுக்கு வந்தது, ஆண்டுதோறும் அவனுக்கு வழங்கப்பட்ட போனஸ் தொகை. அட! அதுவும் ரூ.1,800.
மொத்த வருமானப் பணத்துக்கும் அல்ல.மாத ஊதியத்தில் அவனுடைய தேவைகள் போக மீதத்தை அவன் சேர்த்து வைத்திருக்கலாம். தவிர, திருமணம் ஆகாமல் இருந்த அந்த 2 ஆண்டுகளின் போனஸ் தொகைக்கும் மனைகள் வாங்கிப் போட்டிருக்கலாம். அவற்றை மட்டும் செய்திருந்தால்கூட போதும்இப்போது குறைந்தபட்சம் மூன்று, நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள மனைகள் வைத்திருப்பான்.
அப்போது வெறும் ரூ.1,800 ஆக இருந்தது, 35 ஆண்டுகளுக்குப் பின் ரூ.1 கோடிஆகிறது என்றால் அந்த முதலீட்டின் மதிப்புவளர்ந்திருக்கிறது. மண்ணுக்குள் விதைக்கப்படும் ஒரு கிலோ நெல்மணிகள் 100 கிலோ நெல்மணிகளாக விளைந்து பெருகுவது போல, வீட்டு மனையில் முதலீடு செய்யப்பட்ட 1,800 ரூபாய், 35 ஆண்டுகளில் 5555 மடங்காக விலை உயர்ந்திருக்கிறது.
போனஸ் பணத்தை முதலீடு செய்தஅவனுடைய சக ஊழியர்கள் இன்று பலகோடிகளுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் அவன்? செலவு செய்து தீர்த்த அவனிடம் அந்த நினைவுகள் மட்டுமே. அவை கூட முழுமையாக இருக்குமா என்று சொல்ல முடியாது.
அனுபவிப்பது தவறல்ல. எதை அனுபவிக்கிறோம் என்பதில் வேறுபாடு இருக்கிறது. விதைத்து பெரிதாக வளர்த்து, உட்கார்ந்து சாப்பிட்டு அனுபவிக்க வேண்டிய ஒன்றை, அப்படியே விதை நெல்லாக இருக்கும்போதே விளையாட்டாக சாப்பிட்டு முடித்தால்? வாரி இறைத்தால்!
35 ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமில்லை. எப்போது செய்தாலும் சில பல ஆண்டுகளுக்குப் பின் சொத்துகளின் மதிப்பு அதிகரிக்கவே செய்யும், இப்போது முதலீடு செய்பவர்கள், வருங்காலத்தில் மதிப்புப் பெருகிய சொத்துகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.
வீட்டு மனைகள்தான் என்றில்லை. தங்கமோ, வங்கி வைப்புகளோ, பரஸ்பர நிதிகளோ.அல்லது வேறு எதில் முதலீடு செய்திருந்தாலும், பல ஆண்டுகளுக்குப் பின் அவற்றின் மதிப்பு கூடுதலாகத்தான் இருக்கும்.
ஆம். அப்போது மட்டுமல்ல. எப்போதும் சரியான முதலீடுகள் பணத்தைப் பெருக்கித் தரும். எனவே, கிடைப்பது முழுவதையும் உண்ண வேண்டாம். ஒரு பகுதியை விதைத்து வளர்க்கலாம். குடும்பத்தின் வருங்கால நன்மைக்காக.
- பொருளாதார நிபுணர்; writersomavalliappan@gmail.com