

ஆலோசகர் என்ற முறையில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கும் அழைப்பு வந்திருந்தது. சுமார் 40 பேர் வேலை செய்யும் தகவல் தொழில்நுட்பத் துறை சேவை நிறுவனம் அது.
அந்த சிறிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், சிலரது சிறந்தபணிக்கான பாராட்டுகள் முடிந்தன. கைதட்டல்கள், கைகுலுக்கல்கள், வாழ்த்துகள் என உற்சாகமும் கலகலப்புமாய் கூட்டம் முடிந்தது.
“நான் பெயர் வாசிப்பவர்கள் மட்டும் இருங்கள். மற்றவர்கள் போகலாம்” என்றார் நிறுவனத் தலைவர். 6 பெயர்கள் வாசிக்கப்பட்டன. அவர்கள் முகங்களில் கொஞ்சம் திகைப்பு. அதை மறைத்து லேசாக புன்னகைத்தபடி அமர்ந்திருந்தார்கள். அவர்கள் அனைவருமே சிங்கப்பூரில் இருக்கும் ஒரு வாடிக்கையாளர் நிறுவனத்திற்காக சென்னையில் இருந்து வேலை செய்யும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள்.
நிறுவனத்தின் தலைவர் நின்றபடி பேசினார். “உங்களுக்குத் தெரியும் கடந்த மூன்று மாதங்களாக நம்வாடிக்கையாளர்களிடமிருந்து நமக்கு வரும் வேலைகள் குறைந்து கொண்டே வருகின்றன. இனி அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை” அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். தலைவர் தொடர்ந்தார்.
“எனவே இனி உங்களுக்கு நம் நிறுவனத்தில் வேலை இல்லை. வேலை இல்லை என்கிற முன்னறிவிப்பு கொடுக்க வேண்டிய ஒரு மாதத்திற்கான சம்பளம் கொடுத்து விடுவோம். தவிர, வேலை இழப்பு இழப்பீட்டுத் தொகைக்காக, நீங்கள் ஏற்கெனவே வேலை செய்திருக்கும் ஒவ்வொருஆண்டுக்கும் 15 நாட்கள் ஊதியம் மற்றும் உங்கள் கணக்கில் இருக்கும் விடுப்புகளுக்கான பணமும் கொடுக்கப்படும். நாளையிலிருந்து நீங்கள் வேலைக்கு வர வேண்டாம்” என்றார்.
எனக்கு அதிர்ச்சி. கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு லேசான அதிர்ச்சிதான். தலைவர் இயல்பாக பேசினார்.
’டெவலப்பர்கள்’ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட ஐ.டி. புரோகிராம் எழுதும் திறன் கொண்டவர்களுக்கு இதுபோன்ற நிறுவனங்களில் பெரும் சம்பளத்துடன் வேலை கொடுப்பார்கள். இளங்கலை பட்டப்படிப்பு படித்திருந்த அவர்களில் பலரின் வயது 23, 24 தான் இருக்கும். மாத ஊதியம் 60 ஆயிரம் முதல் லட்சம் வரை.
டெவலப்பர்களை வேலைக்கு எடுக்கும் நேர்முகத்தேர்வுகளிலும் நான் இருந்திருக்கிறேன். “இப்போது என்ன சம்பளம் வாங்குகிறீர்கள்? என்று கேட்டால் அறுபதாயிரம்” என்பார்கள். “நாங்கள் வழங்கும் புதிய வேலையில் என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்” என்று கேட்டால், சாதாரணமாக 90 ஆயிரம் என்பார்கள். 50 % உயர்வு.
நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் புதிய வியாபார வாய்ப்பு மற்றும் அதன் அவசரத்தைப் பொறுத்து, மறுபேச்சின்றி அந்த 90 ஆயிரத்திற்கு சரி என்று சொல்லிவிட்டு,எப்போது சேரமுடியும் என்று கேட்பார்கள். சீக்கிரமே சேரத் தூண்டுவதற்காக ‘ஜாயினிங் போனஸ்’ என்று ஒரு தனிப்பட தொகை கொடுக்கும் வழக்கமும் இருக்கிறது.
உடனடியாக சிறந்த மிகச்சிறந்த டெவலப்பர்கள் தேவைப்பட்ட ஒரு நிறுவனம் கொடுத்த ஜாயினிங் போனஸ்,ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஒரு BMW மோட்டார் சைக்கிள்.
அப்படிப்பட்ட பெரும் சம்பள வேலைகளின் மறுபக்கம், “நாளை முதல் நீங்கள் வர வேண்டாம், அதற்காக இவ்வளவு பணம் தருகிறோம்” போன்றவை.
“நீங்கள் ஏற்கெனவே வேலை பார்த்த நிறுவனத்தில் ஆறு மாதம் மட்டும்தான் வேலை பார்த்திருக்கிறீர்கள். ஏன் அந்த வேலையை விட்டீர்கள்?” என்று நேர்முகத் தேர்வில் கேட்டால், “எங்கள் வாடிக்கையாளர் அவருடைய வியாபாரத்தை சுருக்கி விட்டார் (டவுன் சைஸ்). அதனால் என்னை அனுப்பி விட்டார்கள்” என்று சொல்வார். அது விண்ணப்பதாரரின் குறைபாடாக பார்க்கப்படாது.
அந்த 6 நபர்களும் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தார்கள். ஒருவர் என்னிடம் பேச விரும்பினார். வேறு ஒரு அறையில் அமர்ந்தோம்.
“என்ன செய்யப்போறேன்னு தெரியலை” என்றார். கண் கலங்கியது போலிருந்தது.
“உங்களுக்கு இங்க என்ன சம்பளம்?
“லட்சத்து இருபதாயிரம்”
“எவ்வளவு மாதங்களாக வேலை செய்கிறீர்கள்?”
"ஒன்றரை ஆண்டுகளாக”
“அதற்கு முன்?”
“XXXX டெக்னாலஜியில்”
“அங்கே என்ன சம்பளம்?”
“மாசம், 85,000”
“எவ்வளவு சேமிப்பு வைத்திருக்கிறீர்கள்?”
யோசித்தார். சிரித்தார். அதிகமில்லை என்றார். சில EMI களுக்கு பணம் போகிறது என்றார். பேசினோம். கிளம்பிச்சென்றார்.
இப்படிப்பட்ட வேலை இழப்புகள் அவர்கள் ‘இண்டஸ்ரி’யில் சாதாரணம். வேலைக்கு வராமலேயே சம்பளம்தரப்படுகிற ஒரு மாத காலத்தில், வேறு ஒரு வேலை கிடைத்துவிடும். தவிர, உடனே வேலைக்கு சேர்பவர்களுக்குநல்ல வரவேற்பு உள்ள ‘போட்டி வியாபார சூழ்நிலை’உதவியாக இருக்கும். இந்தக் காரணங்களால் அங்கே பணிபுரியும் இளையோர்களில் பலருக்கு தாராளமாக கிடைக்கும் பணத்தின் அருமை தெரிவதில்லை.
அடுத்தடுத்த வேலைகள் உடனே கிடைப்பதும், சம்பளத்தொகை விரைவாகஅதிகரிப்பதும் தான் இதற்குக் காரணம். இது இப்படியே தொடரும் என்று சொல்ல முடியாது. சில ஆண்டுகளுக்குஒரு முறை நிலைமையில் மாற்றம் வரும்.
முன்பு 2000-மாவது ஆண்டில் ‘டாட் காம் பஸ்ட்’, 2008-ல் சப் பிரைம்’, 2019-ல் கோவிட்-19 போன்றவற்றால் பொருளாதார சுணக்கம் வந்தது போல, வேகமாக மாறும் உலகில் எப்போது வேண்டுமானாலும் வேறு சிக்கல் வரலாம். அதனால் பெரிய எண்ணிக்கையில் வேலை பறிபோகலாம். அடுத்த வேலை கிடைக்க பல மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட ஆகலாம்.
கடந்த சில ஆண்டுகளாக உலகெங்குமே, ‘எல் நினோ’ போன்ற பருவநிலை மாற்றங்களால் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, சில மணி நேரங்களில் கொட்டித் தீர்க்கிறது. குறுகிய நேர பெருமழையால் ஊரெங்கும் பல சென்டிமீட்டர் உயரத்திற்கு தண்ணீர் நின்று இயல்பு வாழ்க்கைமுடங்கிப் போகிறது. இதனால் தண்ணீரை வெளியேற்றினால் போதும் என அரசு நிர்வாகங்கள் முனைந்து, கிடைத்ததண்ணீரை சேமிக்காமல் கடலுக்குள் தள்ளுகின்றன. பிறகுவறட்சியால் குடிநீருக்கே திண்டாடும் நிலை ஏற்படுகிறது.
இப்படித்தான், இப்போதைய இளைஞர்கள் சுலபமாய் கிடைத்ததென மொத்த வருமானத்தையும் செலவழித்து முடிக்கிறார்கள். அதன்பின், சில ஆண்டுகளுக்கு ஓருமுறை பொருளாதார சுணக்கம் வந்து பலரின் வேலையையும் வருமானத்தையும் பறிக்கின்றன. வானியல், பொருளாதாரம் ஆகிய இரண்டிலும் சில புதிய வாய்ப்புகள். உடன் இலவச இணைப்பாய் சில புதிய சிக்கல்கள்.
மழைநீர் சேகரிப்பு சரியாய் செய்து, பெருமழையையும் நல்வாய்ப்பாக்கலாம். இதுபோல அதிக வருவாய் கிடைக்கும்போது சேமித்து, எப்போதும் பொருளாதார சிக்கலின்றி வாழலாம். உரக்கச் சொல்வதென்றால், இப்படிச் சொல்வேன், ‘இப்போதைய வருமானம் இப்போதைக்கு மட்டுமானதல்ல’.
- writersomavalliappan@gmail.com