

1970-களில் நிலவிய லைசென்ஸ் ராஜ் காலத்தில் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவின் மிகப்பெரிய தொழில் முனைவோர்களில் ஒருவராக ரவுனக்சிங் விளங்கினார். தற்போதைய பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ள தஸ்காவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். லாகூரில் வெறும் 8 ரூபாய் மாத சம்பளத்தில் ஒரு இரும்பு பைப் வியாபாரியிடம் விற்பனையாளராக சேர்ந்து அடிப்படை வர்த்தக நுணுக்கங்கள், தொழில் முனைவு திறன் போன்றவற்றை கற்றுக் கொண்டார். சுதந்திரத்தின்போது ஏற்பட்ட பிரிவினைக்குப் பிறகு டெல்லியில் ஆரம்பத்தில் பைப்புகளை வாங்கி விற்றவர் பின்னர் பைப் தயாரிக்கும் பாரத் ஸ்டீல் ட்யூப் என்ற தொழிற்சாலையை தொடங்கினார்.
கேரளாவில் ரூபி டயர் என்ற நிறுவனத்துக்கு 40,000 டயர் தயாரிப்பதற்கான தொழிற்சாலைக்கு உரிமம் வாங்கி வைத்ததோடு சரி, வேறு எதுவும் செய்யவில்லை. தற்செயலாக டெல்லியில் உள்ள கேரளா ஹவுஸில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற ரவுனக்கிடம், அப்போதைய கேரள முதல்வர் அச்சுத மேனன் இந்த உரிமத்தை பயன்படுத்துமாறு முன்மொழிந்தார். இதன் மூலம் பிறந்தது தான் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம்.
வண்டி உருண்டோட அச்சாணி வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி அப்பல்லோ டயருக்கு அச்சாணியாக இருந்தவர் ரவுனக்கின் மூத்த மகன் ஓங்கார் கன்வர் சிங். அதுவரை இந்திய டயர் சந்தையில் குட் இயர், ஃபயர் ஸ்டோன், சியட், டன்லப் போன்ற நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சி வந்தன. 1968 காலகட்டத்தில் டயர் சந்தையில் உற்பத்தியாளர்கள் எதைத் தயாரிக்கிறார்களோ அதைத்தான் வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தது. புதிய தொழில்நுட்பங்களுக்கும் தரத்திற்கும் பெருமளவிற்கு இடமில்லை என்பதோடு போட்டியே கிடையாது.
சுதந்திரத்தின்போது இந்தியாவில் இருந்ததார் சாலைகளின் நீளம் வெறும் 3.38 லட்சம் கிலோமீட்டர்தான். ஆனால், அப்பல்லோ டயர் ஆரம்பிக்கும் போது இது 12 லட்சத்தை எட்டி இருந்தது. வளர்ந்து வரும் நாடாக இருக்கும் இந்தியாவில் டயர் விற்பனை நன்றாக இருக்கும் என கணித்த ரவுனக் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தொழிற்சாலை ஆரம்பிக்கும் போது கேரளாவில் நிலவி வந்த அதிகாரப்பூர்வமற்ற வேலை நிறுத்தம் காரணமாக அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் அடிக்கடி தடைபட்டன. என்றாலும் ஒரு வழியாக தொழிற்சாலை கட்டப்பட்டு வர்த்தக ரீதியாக உற்பத்தியும் தொடங்கப்பட்டது.
ஆனால், விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை, சப்ளையர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியவில்லை. தொழிற்சாலையில் சிறு பிரச்சினை என்றாலும் உடனடியாக வேலை நிறுத்தம், வெளிநடப்பு போன்றவை தொடர் கதையாகவே இருந்தன. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் அப்பல்லோவின் போர்டு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக இடைக்கால போர்டு அமைக்கப்பட்டது. திடீரென ஒரு நாள் இந்திய அரசாங்கம் இந்த நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான கடிதத்தை காண்பித்து தன்வசமாக்கிக் கொண்டது.
அந்த காலகட்டத்தில், டயர் தயாரிப்பில் அவ்வளவு லாபம் இல்லை என்றாலும் டன்லப், மோடி டயர் நிறுவனங்கள் மட்டுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு லாபத்தில் இயங்கின. மற்றவை எல்லாம் நஷ்டத்தில்தான் இருந்தன.
ஆனால் நஷ்டத்தில் இருந்த கம்பெனி எல்லாற்றையும் அரசாங்கம் ஏற்று நடத்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. அப்பல்லோவை மட்டும் கையகப்படுத்துவதற்கான காரணம், அன்றைய காலகட்டத்தில் நிலவிய டெல்லி அரசியல் தான் என்பது தெள்ளத் தெளிவானது.
ஒரு கட்டத்தில் ஒரு ரூபாய்க்கேனும் கம்பெயை யாரிடமாவது விற்றுவிட்டு தலைமுழுகலாம் என்ற ரேஞ்சுக்குப் போய்விட்டார் ரவுனக். அப்போதுதான் ரவுனக் தனது மூத்த மகன் ஓங்கார் கன்வர் சிங்கிடம் கடும் பிரச்சினைகளுக்கிடையே நிறுவனத்தை புதுப்பிக்கும் வாய்ப்பை வழங்கினார்.
50 தொழிலாளர்களையும், ஐந்து தொழிற்சங்கங்களையும் கொண்டிருந்த அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தில் ஓங்கார் அடி எடுத்து வைத்தபோது ஊழியர்கள் ஓங்காரை திரும்பிப் போ என்று கோஷமிட்டனர். அவர்களோடு கலந்துரையாடி, ‘‘என்னை நம்பி எனக்கொரு வாய்ப்பு தாருங்கள், நாம் ஒரு குழுவாக இணைந்து பணி செய்து நிறுவனத்தை நல்ல நிலைமைக்கு எடுத்துச் செல்வோம்” என்று உறுதியளித்தார்.
அதையடுத்து, போட்டியாளர்களின் தயாரிப்புகளை ஒப்பிட்டு அவற்றைவிட சிறந்ததாக இருக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி, டயர்களின் தரத்தையும், விற்பனையையும் உயர்த்தி வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்றது அப்பல்லோ. நிறுவன நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் புதியவர்களை புகுத்தியதோடு, திறமைக்கு தகுந்த வகையில் பழைய ஊழியர்களுக்கு பொறுப்புகளை மாற்றியமைத்தார் ஓங்கார்.
டயர் தொழில்நுட்பம் தெரியாதவர், இந்த தொழிற்சாலையில் வந்து என்ன செய்யப் போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், டயர் பற்றி தெரியாததுதான் தனக்கு ஒரு சாதகமான விஷயம் என்றும் திறந்த மனத்துடன் பணியாற்றியதால் இந்த சாதனையை செய்ய முடிந்தது என்றும் கூறுகிறார் ஓங்கார்.
நிறுவனத்தின் நிதிப் பிரச்சினைகளை சமாளிக்க மறுசீரமைப்பு திட்டத்தை வங்கிகளிடம் முன்மொழிந்து தேவையான நிதி உதவியைப் பெற்றார். ஒரு வழியாக அரசின் கட்டுப்பாட்டிலும் இருந்து நிறுவனத்தை மீட்டெடுத்தார். ஓங்கார் சேர்ந்த நேரத்தில் அப்பல்லோவின் ஆண்டு நஷ்டம் ரூ.4 கோடி என்ற அளவில் இருந்தது. அவர் அடி எடுத்து வைத்த இரண்டாவது ஆண்டிலேயே ஆண்டுக்கு ரூ.6 கோடி லாபம் கிடைத்தது. இப்போது நிறுவனத்தின் லாபம் சுமார் ரூ.1,000 கோடி.
இந்தியாவில் ஐந்து இடங்களிலும், ஆப்பிரிக்கா, ஹாலந்து, ஹங்கேரி போன்ற பல நாடுகளிலும் தொழிற்சாலைகளை அமைத்து இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை என அனைத்து உபயோகத்திற்கும் ஏற்ற டயர்களை தயாரித்து வருகிறது அப்பல்லோ. 2500 அவுட்லெட், 5000 விநியோகஸ்தர்களோடு கிட்டத்தட்ட ரூ.25,000 கோடிக்கு வர்த்தகம் செய்யும் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தில் இன்று 18 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர்.
எழுத்தாளர் டிம் புக்கே (Tim Bouquet) எழுதியிருக்கும் “The Man Behind the Wheel”, ரவுனக்சிங் தொடங்கிய அப்பல்லோ டயர்ஸ், அவரதுமகன் ஓங்கார் கன்வர் சிங் மூலம் நலிவடைந்த நிலையிலிருந்து தொழிலை மீட்டதோடு அந்த தொழிலில் உலகளாவிய வகையில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்ற கதையை சுவாரஸ்யமாக விளக்குகிறது.
உலக டயர் சந்தை, டயர் தொழில்நுட்பம், தொழில் துறையில் அரசியல், குடும்பச் சண்டை, நிதி பிரச்சினை, வங்கிகள், தொழிற்சங்கங்கள் என என்னென்ன விதமான பிரச்சினைகள் இருக்கிறதோ அவை அனைத்தையும்இந்த புத்தகம் விவாதிக்கிறது. மேலாண்மை பயிலும் மாணவர்களுக்கும், மேலாளர்களுக்கும், தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் இந்தப் புத்தகம் ஒரு நிர்வாகப் பாடம்.