பணமின்றி அசையாது உலகு - 5: சேமிக்கும் அளவுக்கு பணம் இல்லையே!

பணமின்றி அசையாது உலகு - 5: சேமிக்கும் அளவுக்கு பணம் இல்லையே!
Updated on
2 min read

சேமிக்க வேண்டியது அவசியம் என்பது புரிகிறது. ஆனால், சேமிக்கும் அளவுக்கு பணம் மிச்சமாவதில்லையே! என்ன செய்ய என்று கேட்பார்கள் சிலர்.

‘கார் பார்க்கிங்’ இடங்களை பார்த்திருக்கிறோம். நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களில் சிலவற்றின் முன்பக்கம் கண்ணில்படும். சிலவற்றின் பின்புறம் தெரியும்.

வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தும்போது சிலர், காரை ரிவர்ஸ் எடுத்து, சற்று சிரமப்பட்டு பின்புறமாக நுழைத்து நிறுத்திவிட்டுப் போவார்கள். அப்படி நிறுத்தப்பட்ட வண்டிகளின் முன்பக்கம் சாலையை எதிர்கொண்டு நிற்கும்.

வேறு சிலர், வண்டியை கிடைக்கிற இடத்தில் அப்படியே சுலபமாக நேராக நுழைத்து நிறுத்திவிட்டு கிளம்பிவிடுவார்கள். அப்படிப்பட்ட வண்டிகளின் பின்புறம் சாலைப்பக்கம் இருக்கும்.

திரும்ப வந்து வண்டியை எடுக்கும்போது இந்த இருசாராரில் எவருக்கு சுலபமாக இருக்கும்? ஏற்கெனவே ரிவர்ஸ் எடுத்து, வண்டியை முன்புறம் வெளியே தெரியுமாறு விட்டவருக்குத்தானே!

வந்ததும் ஏறியமர்ந்து அவர்களால் வண்டியை ஒட்டிச் செல்ல முடியும். மற்ற வகையினர் வண்டியை நிறுத்தியபோது சிரமப்படாமல் அப்படியே நுழைத்தனர். ஆனால், திரும்ப எடுக்கும்போது அவர்கள் அவசியம் ரிவர்ஸ் எடுத்துத்தான்வெளியே வரமுடியும்.

வண்டிகளைக் கொண்டுவந்து நிறுத்தியபோது அவர்கள் அனைவருக்குமே சமஅளவு நேரம் இருந்ததாக, வேறு பரபரப்பு ஏதுமில்லை என்று வைத்துக்கொண்டால். இந்த இரு சாராரின் அணுகுமுறைகளை எப்படி விவரிக்கலாம்?

முதல்சாரார் வண்டியை திரும்ப எடுக்கும் நேரம் தங்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்று விரும்பி, அதற்காக முன்கூட்டியே சிறிது நேரம் செலவு செய்து அந்த வேலையை முடித்துவிட்டுப் போகிறார்கள்.

மற்றொரு வகையினர், 'எடுக்கும்போது பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு ஏன் சிரமப்படனும்' என்று, அவர்கள் எப்படியும் செய்தாக வேண்டிய ரிவர்ஸ் எடுக்கும் வேலையை செய்யாமல் தள்ளிப்போடுகிறார்கள்.

யாருக்குத் தெரியும், திரும்ப வந்து எடுக்கும் நேரம் அவர்களுக்கு அவசரமானதாக இருக்கலாம். அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் மற்ற வண்டிக்கார்களும், திரைப்படம் முடிந்து வெளியே வரும் நேரம் போல பலரும் அவசரமாக வெளியேற முயற்சிக்கலாம். அவர் வண்டியை எடுப்பது சிரமம் ஆகலாம்.

வண்டியை விடும்போதே சிரமம் பாராமல் ரிவர்சில் விடுவது முன் எச்சரிக்கை உணர்வு உள்ளவர்கள் செய்வது. இதனால் வேலை முடிந்து திரும்பி வரும் அதிக அயர்சியான நேரத்தில் சிரமப்பட வேண்டியிருக்காது.

அவர் அந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவர். வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வருகிறார். சில ஆண்டுகளாகநேரில் பார்க்காத அவருடைய கல்லூரி கால நண்பர் கணேசன் அவருடைய அந்தப் பெரிய வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார்.

வியப்பும் சந்தோஷமுமாக, ‘‘டேய் கணேசா!எப்ப வந்த’’ என்று கேட்டவர் ஏனோ, ‘‘ஜஸ்ட் இரண்டு நிமிஷம் கொடு’’ என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் ஓடி, மாடிப்படி ஏறுகிறார். கணேசன் முகத்தில் வியப்பு. என்ன ஆச்சு என்ற சிந்தனையுடன் காத்திருக்கிறார்.

சில நிமிடங்களில் வேகமாக கீழே இறங்கிவந்தவர், கணேசன் கையைப் பிடித்துக் குலுக்குகிறார். தோளோடு தோள் சேர்த்து அணைக்கிறார். இருவர் கண்களும் கலங்கி விடுகின்றன.

‘‘அது சரி. அப்படி ஏன்டா அவசரமா மாடிக்கு ஓடுன’’ கணேசன் ஆவலை அடக்க முடியாமல் கேட்கிறார்.

“அது ஒன்னும் இல்லடா. எங்க அலுவலகத்தின் முக்கிய அறைகளின் சாவிகள் எங்கிட்டதான்இருக்கும். அவற்றையும் வண்டி சாவியையும் எப்பவும் மாடியில என் ரூம் அலமாரியிலதான் வைப்பேன். அங்க போய் வைச்சிட்டு ஓடி வர்றேன்”

“அடேயப்பா! அதை கொஞ்ச நேரம் கழிச்சு வச்சா என்ன குறைஞ்சா போயிடும்? பத்து வருஷம் கழிச்சுப் பார்க்கிறோம். நின்னு பேசாம ஓடின!”

“குறைஞ்சுபோயிடாதுதான். ஆனா தேடவேண்டிவரலாம். ஒரே இடத்தில வைக்கிறத பழக்கமாக்கிக்கிட்டேன். அதனால நாளைக்கு சாவிகளை எடுத்துகிற நேரம் சுலபமா இருக்கும். என்ன அவசரமானாலும் அதைத் தேடி பதற்றப்படவேண்டியிருக்காது.

“வீட்டுக்குள்ளதானே இருக்கும். கொஞ்சம் தேடினால்தான் என்ன!”

“இப்பத்திய நிலைமை இதுதான்னு எனக்குத் தெரியுது. சமாளிக்க முடிகிற அளவுன்னு புரியுது. ஆனா நாளைக்கு காலையில என்ன நெருக்கடி வரும்,எவ்வளவு அவசரமா கிளம்ப வேண்டிருக்குமுன்னு தெரியாது. அதனால தெரிஞ்ச சிரமத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதனால் தெரியாத சிரமத்தை தவிர்க்கிறேன்.

“ஏ யப்பா.. பெரிய மூளைக்காரந்தான் நீ” என கணேசன் கூற, “அதெல்லாம் பெரிய வார்த்தை. சரியான எச்சரிக்கைக்காரன்னு வேணா சொல்லு” என்கிறார் நண்பர்.

காரை பார்க் செய்யும்போதே, திரும்ப எடுக்கும்போது சிரமப்படாமல் வேகமாக எடுக்கக்கூடிய விதம் நிறுத்துவதும், பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி நண்பனை எதிர்பாராமல் பார்த்தபின்பும், நேரம் எடுத்து அலுவலக சாவிகளை வழக்கமாக வைக்கும் இடத்திலேயே வைத்து மறுநாளைய நேரத்தை மிச்சப்படுத்துவதும் எதற்கான எடுத்துக்காட்டுகள்? இன்றைய வருமானம் குறைவாக இருந்தாலும் அதில் ஒரு பகுதியை வருங்காலத் தேவைகளுக்காக சேமிக்க வேண்டியதற்கான உதாரணங்கள்.

இப்போது சந்திக்கும் இன்னது என்றுதெரிந்த நெருக்கடிகளைவிட பின்னால்வரக்கூடிய வாய்ப்பிருக்கும், அதன் தீவிரம் தெரியாத நெருக்கடிகள் குறித்து கூடுதல் எச்சரிக்கை தேவை.

இந்த எச்சரிக்கை உணர்வும் அணுகுமுறையும் நேர மேலாண்மைக்கு மட்டுமல்ல வருமானத்தின் ஒரு பகுதியை சேமிப்பதற்கும் பொருந்தும். ‘வந்தா பாத்துக்கலாம்’ என்பதுஹீரோத்தனமாக தெரியலாம். ஆனால், வருவதற்கு முன்னால் ஏற்பாடு செய்துகொள்வதே புத்திசாலித்தனம்.

வயதான பின், பணியில் இருந்து ஓய்வு, வருமானம் இல்லாத நிலை தவிர, கூடுதலாக கொஞ்சம் ஆரோக்கியத்திற்கும் சிரமம் என்கிற சூழ்நிலையில், கையில் பணம் இல்லாமல் முடியாது.

வேலைக்கு போனதும் குறைவாக செலவுசெய்து ஓரளவாவது சேமிக்க வேண்டும். அதுசிலருக்கு சிரமமாக இருந்தாலும் சில ஆசைகளை தவிர்த்து, பயன்படுத்தும் சிலவற்றின் அளவுகளைக் குறைத்து பணத்தை சேமிக்க, வாழ்க்கையின் பிற்பகுதியில் நிம்மதியாக வாழலாம். அது, வண்டியை விடும்போது ரிவர்ஸில் விடுவது போன்றது. சிரமம் பாராமல் சாவிகளை குறிப்பிட்ட இடத்தில் வைக்க நேரம் செலவிடுவது போன்றது. அப்போதைக்கு சிறு வேலை. ஆனால் பிற்பாடுக்குபெரும் உதவி.

- பொருளாதார நிபுணர்

writersomavalliappan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in