

‘எங்க அப்பா எவ்வளவு அருமையானவர் தெரியுமா! என்று சொல்லும் பலருடைய அப்பாக்கள் மறைந்து சில ஆண்டுகள் ஆகியிருக்கும்’ என்று முகநூலில் ஒரு வாக்கியம் பார்த்தேன்.
அப்பாக்கள் எப்போதுமே அக்கறையானவர்கள்தான். ஆனால் பிள்ளைகள் அதை அவர்கள் இருக்கும்போது உணர்வதில்லை என்பதுபோல, வருமானம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் போது பலருக்கும் அதன் அருமை தெரிவதில்லை.
சமீபத்தில் மறைந்த ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர் சில ஆண்டுகளுக்கு முன்பு, என்னிடம் சொன்னது, ‘‘வள்ளியப்பன், நானெல்லாம் இவ்வளவு நாட்கள் வாழ்வேன் என்று நினைத்ததில்லை’’. சொன்னதில் இருந்து சொல்லாததை புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்வார். அப்படி புரிந்துகொண்டது,
‘‘அதனால்தான் பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளவில்லை. இப்பொழுது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது’’. அப்போது அவருக்கு வயது 75 இருக்கும்.
ஊதியமோ அல்லது வேறு வகை வருமானங்களோ தொடர்ந்து அதன்போக்கில் வந்துகொண்டிருப்பதால் அது எப்போதாவது ஏதாவது காரணத்தினால் வராமல் நின்றுபோகக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு பலரிடம் இல்லை. அதனால் பணத்தை சேமிப்பதில்லை.
‘பிரேக் டவுன்’ காரணமாக நட்ட நடுக்காட்டில் நின்றுவிடும் பேருந்து போல, நூற்றில் 10 பேருக்கு உலக, தேசப் பொருளாதாரங்கள், வேலை செய்யும் நிறுவனத்தின் வியாபாரம், மேலதிகாரிகள் தொல்லை அல்லது தன்னுடைய உடல்நிலை போன்ற ஏதாவது காரணத்தால் வருமானம் நின்றுபோகிறது. மீதி தூரத்தை எப்படிக் கடப்பது? காலத்தை எப்படி ஓட்டுவது?
வாகனம் ஓட்டிக்கொண்டு போகிறோம். எதிரில் அதிகபட்சம் 50 அடி அல்லது 100 அடி சாலை கண்ணுக்குத் தெரியலாம். வண்டி ஓட ஓடத்தான், அடுத்தடுத்த 50, 100 அடிகள் கண்ணில்படும். அதற்காக, கண்ணில் படும் நூறு அடிகளுக்கு மட்டும் வாகனத்தில் பெட்ரோல் இருந்தால் போதுமா? சென்றடைய வேண்டிய ஊர் இருக்கும் தூரம்வரை வண்டியில் எரிபொருள் வேண்டுமல்லவா.
சிலர் அவர்கள் வாழ்க்கையை ஓட்டுவது அடுத்தடுத்த மாதங்கள் அல்லது அடுத்த ஒன்று இரண்டு ஆண்டுகளை மட்டுமே மனக்கண்ணில் வைத்து போகவேண்டிய மொத்த தூரம் பற்றி கவனமில்லாமல் கிடைக்கும் முழுப்பணததையும் செலவு செய்கிறார்கள்.
உசைன் போல்ட் ஒலிம்பிக்ஸ் ஓட்டப்பந்தயத்தில் மூன்று முறை தொடர்ந்து முதலிடம் வந்தவர். 2009-ம் ஆண்டு பெர்லினில் நடந்த போட்டியில், அவர் மணிக்கு 37.8 கி.மீ வேகத்தில் ஓடி 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை செய்தார்.
மற்றொரு புகழ்பெற்ற ஓட்டக்காரர் பெயர், எலிட் கிப்சோகி (Eliud Kipchoge). அவரும் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை செய்தவர். அவருக்கும் தங்கப்பதக்கம் கொடுத்திருக்கிறார்கள். அவர் ஓடிய வேகம் மணிக்கு 20.92 கி.மீ மட்டுமே!
வினோதமாக இருக்கிறதல்லவா? இருவரும் ஓட்டப்பந்தய போட்டியில்தான் உலக சாதனை செய்திருக்கிறார்கள். ஒருவர் மணிக்கு 37.8 கி.மீ வேகத்தில் ஓடி. மற்றொருவர்,20.9 கி.மீ வேகத்தில் மட்டுமே ஓடி! என்ன அதிசயம்!!
இதில் அதிசயம் ஒன்றுமில்லை. கிப்சோகி ஓடிய பந்தய தூரம் 100 மீட்டர் அல்ல. அதைப் போல 422 மடங்கு அதிகம். ஆம். அவர் ஓடி சாதனை செய்தது, 42.195 கி.மீ தூரம் ஓடவேண்டிய மாரத்தான் போட்டியில்.தூரம் 100 மீட்டர் மட்டும்தான் என்றால், உடலில் இருக்கும் முழு சக்தியையும் உடனடியாகப் பயன்படுத்தி அதி விரைவாக ஓடவேண்டும். 10 வினாடிகள் மட்டுமே அப்படி செய்தால் போதும். அதன்பின் நின்று மூச்சிரைக்கலாம். ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். அது உசைன் போல்ட் செய்தது.
ஆனால், ஓடவேண்டியது 42 மீட்டர் அல்ல. 42 கிலோ மீட்டர் தூரம் என்றால்? அவ்வளவு தூரம் ஓடி முடிக்க, கடைசிவரை தெம்பு வேண்டும். அதனால் இயன்றால் கூட முழுவேகத்துடன் ஓட ஆரம்பிக்கக்கூடாது.
அப்படி செய்தால்தான் மாரத்தான் பந்தயத்தை வெற்றிகரமாக ஓடி முடியும். அதனால்தான் வெகுதூர ஓட்டப்பந்தயங்களில் உலக சாதனை செய்தவர்களே 100 மீட்டர் சாதனையாளர் ஓடியதில் கிட்டத்தட்ட பாதி வேகத்தில்தான் ஓடுகிறார்கள்.
வாழ்க்கை, 100 மீட்டர் ஸ்பிரிண்டா அல்லது 42.195 கி.மீ தூரம் மாரத்தான் போன்றதா?
பலரும் வாழ்கையை 100 மீட்டர் தூர ஸ்பிரிண்ட் போல நினைத்து, முழுவேகத்தில் செலவு செய்து வாழ்கிறார்கள். வாழ்க்கைப் பயணம், மாரத்தான் போல நீளமானது. ஓர் வயதிற்கு மேல் வருமானம் வராது. இப்போது சம்பாதிப்பதை வைத்துதான் பின்னாலும் வாழ வேண்டும். முழு வாழ்க்கைக்கும் தேவைப்படும் பணம் என்ற சக்தியை கிடைக்கும் நேரங்களிலேயே, தொடக்கத்திலேயே செலவழித்துத் தீர்த்துவிடாமல், சேமித்து, பெருக்கி, வாழ்க்கை மாரத்தானை கவுரவமாக, நிம்மதியாக ஓடி முடிக்க வேண்டும்.
அது முடியாதது அல்ல!