

கரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் ஜவுளி தொழில் மற்றும் விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடன் உதவி வழங்கும் நோக்கில் 1916-ம் ஆண்டு ரூ.1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்டது கரூர் வைஸ்யா வங்கி . இன்று அதன் மொத்த வணிகம் ரூ.1.40 லட்சம் கோடி. இதுவரையில் இல்லாத அளவில் சென்ற நிதி ஆண்டில் அதன் நிகர லாபம் ரூ.1,100 கோடியைத் தாண்டியுள்ளது. கரூர் வைஸ்யா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக ரமேஷ் பாபு 2020-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற பிறகான இரண்டு ஆண்டுகளில் அவ்வங்கியின் செயல்பாட்டில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவருடனான உரையாடலிலிருந்து...
அமெரிக்காவில் சமீபத்தில் மூன்று வங்கிகள் நிதி நெருக்கடியால் வீழ்ச்சியடைந்தன. அதன் தாக்கம் இந்திய வங்கித் துறையில் பெரிய அளவில் இல்லையென்றபோதிலும், வங்கிகளின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் மக்களிடம் தீவிரமடைந்துள்ளன. கரூர் வைஸ்யா வங்கி எந்த அளவுக்கு அதன் கடன் வழங்கலில் பாதுகாப்புக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது?
குறிப்பிட்ட ஒரு துறைக்கு மட்டும் அதிக அளவில் கடன் வழங்குவது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அமெரிக்க வங்கியான எஸ்விபி வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். அவ்வங்கி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை மட்டுமே மையப்படுத்தி செயல்பட்டு வந்தது.
கரூர் வைஸ்யாவைப் பொறுத்தவரையில், பல தரப்பட்ட துறைகளுக்கும், அதன் செயல்பாடுகளுக்கு ஏற்ப கடன் வழங்கும் நடைமுறையைக் கொண்டுள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் எங்கள் கடன் வழங்கல்செயல்பாட்டில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளோம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எங்களது மொத்த கடன் வழங்கலில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் மட்டும் 40 சதவீதம் ஆகும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கிய கடன்களை திரும்பப் பெறுவதில் நிறையசவால்கள் உண்டு. அந்தக் கடன் திரும்பி வராமல் போகும்பட்சத்தில் வங்கி நெருக்கடிக்கு உள்ளாகிவிடும். இதனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் வழங்கலை குறைக்கத் தொடங்கினோம். முன்புகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.300 கோடி வரை கடன் வழங்கினோம். தற்போது அந்த வரம்பை ரூ.125 கோடியாக குறைத்துள்ளோம். அந்த வரம்புக்கு மேல் எந்த நிறுவனத்துக்கும் கடன் வழங்குவதில்லை.
ரூ.25 கோடிக்கு மேலான கடன்களை கார்ப்பரேட் கடன் என்றும் ரூ.25 கோடிக்கு கீழானகடன்களை கமர்சியல் கடன் என்றும் வரையறுக்கிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பதிலாக, கமர்சியல் வகையின் கீழ் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன்வழங்குவது லாபகரமானதும் பாதுகாப்பானதும்கூட. இதனால், சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில்கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினோம்.
தற்போதைய நிலவரப்படி, எங்களது மொத்த கடன் வழங்கலில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் 40 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல், கமர்சியல் கடன் 20 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. வேளாண், சுயதொழில், வீட்டுக் கடன் பிரிவில் கூடுதல் எண்ணிக்கையில் கடன் வழங்கி வருகிறோம்.
இந்த மாற்றங்களின் நீட்சியாகவே, தற்போது வங்கியின் லாபம் பலமடங்கு உயர்ந்துள்ளது. 2020 - 21 நிதி ஆண்டில் எங்களது நிகர லாபம் ரூ.359 கோடியாக இருந்தது. 2022-23 நிதி ஆண்டில் அது ரூ.1,106 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், வாராக் கடன் அளவும் பெரிய அளவில் குறைந்துள்ளது. 2020-21 நிதி ஆண்டில் வாராக் கடன் 3.41 சதவீதமாக இருந்த நிலையில், சென்ற நிதி ஆண்டில் அது 0.7 சதவீதமாக குறைந்துள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பங்களால் வங்கித் துறை மிகப் பெரிய மாற்றத்துக்கு உள்ளாகி வருகிறது. மிகப் பெரிய போட்டிச் சூழலும் உருவாகி இருக்கிறது. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப கரூர் வைஸ்யா வங்கி எந்த அளவுக்கு தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது? போட்டிச் சூழலை எதிர்கொள்ள என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது?
நவீன தொழில்நுட்பத்தை கைகொள்வதில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறோம். தற்போது சென்னையில் எங்களது முதல் டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டை ஆரம்பித்துள்ளோம். இங்கு மக்கள்யாருடைய உதவியும் இன்றி எங்கள் வங்கியில் புதிய கணக்கு திறந்துகொள்ள முடியும். இதுபோல் பல்வேறு சேவைகளை வங்கிக்கு வராமலேயே இந்த யூனிட்டில் பெற முடியும்.
இன்று, எங்கள் வங்கியில் நிகழும் மொத்தபரிவர்த்தனையில் 90 சதவீதம் டிஜிட்டல் முறையில் நிகழ்கிறது. எங்கள் ஊழியர்களின் சராசரி வயது 35. இதனால், அவர்களால் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை எளிதாக கையாள முடிகிறது என்பது மட்டுமல்ல, கல்விப் பின்புலம் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக புரிய வைக்கவும் முடிகிறது.
புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க நவீன தளத்தில் feet on the street என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதன்படி எங்கள் ஊழியர்கள், மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களை வாடிக்கையாளர்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
கரூர் வைஸ்யா நூற்றாண்டு பாரம்பரியமிக்க ஒரு வங்கி. எனினும், அது பிரதானமாக தென்னிந்தியாவுக்குள்ளாகவே இயங்குகிறது. இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு வங்கியை விரிவுபடுத்தும் திட்டம் இல்லையா?
இருக்கிறது. இந்தியாவின் மேற்குப் பிராந்தியங்களில் கிளைகள் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
சமீபத்தில் ரிசர்வ் வங்கி, சமரசத் தீர்வு (Compromising Settlement) எனும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியது. வங்கிகள் அதன் வாராக் கடனை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி தள்ளுபடி செய்துகொள்ள வழிசெய்யும் இந்த நடைமுறையானது, வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்பவர்களுக்கே சாதகமாக அமையும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உண்மையில், ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள சமரசத் தீர்வு நடைமுறை சாதகமானதா, பாதகமானதா?
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வரவேற்கக்கத்தக்க ஒன்று. மத்திய அரசு 2016-ம் ஆண்டு திவால் தீர்வுச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதற்கு முன்புவரையில், நிறுவனங்கள் நிதி நெருக்கடியால் திவாலானால், அந்நிறுவனத்துக்குக் கடன் வழங்கிய வங்கிகள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். இந்நிலையில், திவாலாகும் நிறுவனங்களுக்கு விரைந்து தீர்வு காணும் நோக்கில் மத்திய அரசு திவால் தீர்வுச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதுபோல்தான், கடன் மோசடி செய்த நிறுவனங்களுடன் சமரசத் தீர்வு காணும் ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய அறிவிப்பும்.
சமரசத் தீர்வு என்றால், கொடுத்த கடனை வங்கிகள் முழுமையாக தள்ளுபடி செய்துவிடும் என்ற அர்த்தம் இல்லை. மாறாக, கடனை திரும்பப் பெறுவதற்கான சாத்தியமிக்க வழிகள் குறித்து முடிவெடுக்கப்படும். அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய நடைமுறையால், வங்கிகளின் வாராக் கடன் சுமை குறையும்.
- riyas.ma@hindutamil.co.in