

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சென்னை, டெல்லி, மும்பைஉள்ளிட்ட பெருநகரங்களில் பழையபடி மக்கள் அலுவலகத்துக்குத் திரும்ப ஆரம்பித்திருப்பதன் மூலம் காபிசங்கிலித் தொடர் கடை பிராண்டுகளுக்கு இடையே திடீரென ஒரு முனைப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் காபியின் சில்லறை வணிக வருமானம் ரூ.4,500 கோடியாக உயர்ந்துள்ளது.
ஒரு கப் காபி பருகும்போது நிறையவிஷயங்கள் நடக்கலாம் என்கிற பஞ்ச் வாக்கியத்தோடு 1996-ம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 'கஃபே காபி டே' முதல் கடை திறக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு இதன் நிறுவனர் சித்தார்த்தாவின் மறைவுக்குப் பிறகு இந்த சங்கிலித்தொடர் கடைகள் பலஏற்ற தாழ்வுகளைச் சந்தித்து இன்றைக்குப் புத்துயிர் பெற்று இயங்கி வருகிறது. இதற்குப் போட்டியாக இன்றைக்கு பல சங்கிலித் தொடர் கடைகள் ஆரம்பிக்கப்பட்டு காபி சந்தை களைகட்டி வருகிறது.
இந்தியாவில் கஃபே காபி டேக்கு 1380 கடைகள், ஸ்டார்பக்ஸுக்கு 330 கடைகள், பாரிஸ்டாவுக்கு 350 கடைகள் உள்ளன. ஸ்டார்பக்ஸ் டாடாகுழுமத்துடன் கூட்டிணைவு வைத்து இயங்கி வருகிறது. இப்போது புதிதாகக்களத்தில் இறங்கியிருப்பது இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் உணவு மற்றும் காபி கடையான ‘Pret A Manger’ ஆகும். பிரெஞ்சு மொழியில் இதற்கான பொருள் ‘சாப்பிட தயார்’என்பதாகும். இந்நிறுவனம் மும்பையின் பிரதான இடங்களில் இரண்டு கடைகளைத் திறந்திருக்கிறது. இதன் அடுத்த இலக்கு டெல்லியில் சில கடைகளைத் திறப்பதாகும். இந்நிறுவனம் புதிதாகத் தயாரிக்கப்படும் உணவுக்கும் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படும் காபிக்கும் புகழ் பெற்றதாகும். இந்தியாவில் இந்நிறுவனம் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ‘ரிலையன்ஸ் பிராண்ட்ஸ்’ உடன் கூட்டு சேர்ந்திருக்கிறது.
இதைப் போலவே, காபிக்கும், டோநட்ஸ்களும் கனடாவில் புகழ் பெற்ற துரித உணவு சங்கிலித் தொடர் கடையான ‘டிம் ஹார்டன்ஸ்’ தனது செயல்பாட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. தற்சமயம் டெல்லி, சண்டிகர், லூதியானா, படிண்டா ஆகிய நகரங்களில் 16 கடைகளைத் திறந்திருக்கிறது. புலம்பெயர்ந்த பஞ்சாபியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மத்தியில் இது ‘டிம்மிஸ்’ என வாஞ்சையுடன் அழைக்கப்படுகிறது. சமீபத்தில் மும்பையிலும் இது இரண்டு கடைகளைத் திறந்திருக்கிறது.
இனிவரும் ஆண்டுகளில் இந்த சங்கிலித் தொடர் கடைகளின் சந்தை பல மடங்கு விரிவடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் இயங்கிவரும் 2,200 கடைகள் அடுத்த 3 ஆண்டுகளில் 25-30 சதவீத அளவுக்கு அதிகரிப்பதோடு ரூ.1,200 கோடிக்கும் மேலான முதலீட்டை ஈர்க்கும் எனவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
புதிதாக களத்தில் இறங்கியிருக்கும் Pret A Manger அடுத்த 4 ஆண்டுகளில் சுமார் 100 கடைகளைத் திறக்கவும் திட்டமிட்டு இயங்கி வருகிறது. இதுபோல டிம் ஹார்டன்ஸ், 2026 -ம் ஆண்டு இறுதிக்குள் 120 கடைகளைத் திறக்கத் திட்டமிட்டிருக்கிறது. ஏற்கெனவே இயங்கி வரும்டாடா-ஸ்டார்பக்ஸ் 2023 -ம் ஆண்டு நிதியாண்டில் சுமார் 71 கடைகளைத் திறந்தது. இந்த நிதியாண்டிலும் இது போன்று அதிக எண்ணிக்கையிலான கடைகளைத் திறக்க திட்டமிட்டு வருகிறது.
இப்போது, நாடு முழுவதும் 41 நகரங்களில் 333 கடைகளோடு இயங்கி வரும்ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் 2023-ம் நிதியாண்டில் நிகர வருமானம் ரூ 1,087 கோடியாக இருந்தது என்றும் இது முந்தைய ஆண்டை விட 71 சதவீதம் அதிகம் எனவும் சில புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வருகிறது.
கடைகளின் எண்ணிக்கையைப் பொருத்தவரையில் இரண்டாவது பெரியநிறுவனமாக இருக்கும் பாரிஸ்டா நடப்பு 2023-24 நிதியாண்டில் ரூ.250 கோடி வருமானம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் புதிதாக 150 கடைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. சூடாக காபி சாப்பிட தயாராகுங்கள்.
- சித்தார்த்தன் சுந்தரம் | தொடர்புக்கு sidvigh@gmail