

தீபாவளி தினத்தன்று சென்னையில் ஏற்பட்ட காற்று மாசு கடந்த ஆண்டை விட அதிகம், மேலும் தர வரிசையில் `மிக மோசமான தரத்தை' எட்டிவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் 2015-ம் ஆண்டு 25 லட்சம் பேர் சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உயிரிழப்பானது உயிர்க்கொல்லி நோய்களான எய்ட்ஸ், காசநோய், மலேரியா நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். போர் மற்றும் வன்முறை சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட 15 மடங்கு அதிகம்.
கடந்த 19-ம் தேதியன்று Lancet Commission on Pollution and Health என்ற அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. சுற்றுச் சூழல் சீர்கேடு தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சர்வதேச அளவிலான 47 வல்லுநர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இக்குழுவில் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் இடம்பெற்றிருந்தார்.
இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின்படி உலகம் முழுவதும் சூழல் கேட்டினால் 90 லட்சம் பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சியளிக்கும் தகவலை புள்ளி விவரத்துடன் இக்குழு வெளியிட்டுள்ளது. இது உலக அளவில் நிகழ்ந்த உயிரிழப்பில் 16 சதவீதமாகும். இந்தியாவுக்கு அடுத்தபடியாக சூழல் கேட்டினால் 18 லட்சம் பேர் சீனாவில் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் 92 சதவீத மரணங்கள் பெரும்பாலும் சுற்றுச் சூழல் மாசுபாட்டினால் நிகழ்வதாக அறிக்கை எச்சரித்துள்ளது.
உலகமயமாக்கல் நடவடிக்கை காரணமாக சுரங்கம், உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் ஏழை நாடுகளுக்கு மாறியுள்ளன. எங்கெல்லாம் சுற்றுச் சூழல் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படவில்லையோ அங்கெல்லாம் சூழல் கேடு விளைவிக்கும் தொழில்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஆய்வில் ஈடுபட்ட கார்த்தி சாண்டில்யா குறிப்பிட்டுள்ளார்.
சூழல் கேட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு மட்டும் 4.6 லட்சம் கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 299 லட்சம் கோடி) இந்தத் தொகையானது இந்தியாவின் தேசிய வருவாய் மதிப்பில் இரண்டு மடங்காகவும், உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6.2 சதவீதமாகவும் உள்ளது.
உலக நாடுகளின் ஆண்டு உற்பத்தி வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்குமானால் சுற்றுச் சூழல் கேட்டால் ஏற்படும் இழப்பு 6.2 சதவீதமாகும். ஆக வளர்ச்சி பூஜ்யம்தான் என புள்ளிவிவரங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.உற்பத்தியை அதிகரிப்பதற்கு பதிலாக சூழல் கேட்டை தடுப்பதன் மூலம் 6.2 சதவீத உண்மையான வளர்ச்சியை நாடுகள் எட்ட முடியும்.
இந்தியாவில் 2015-ம் ஆண்டு சுமார் 25.2 லட்சம் பேர் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் அகால மரணமடைந்துள்ளனர். இதில், 18.1 லட்சம் பேர் காற்று மாசுபாட்டினாலும், 6.4 லட்சம் பேர் நீர் மாசுபாட்டினாலும் மரணமடைந்துள்ளனர். கிரீன் பீஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின்படி காற்று மாசு படுவதனால் மட்டும் நம் நாட்டின் 2015-ம் ஆண்டின் மொத்த வருவாயில் 3 சதவீதம், அதாவது ரூ. 4.57 லட்சம் கோடி, இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது!
இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபடுவது ஒரு பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மனிதர்களுக்கு குறுகிய கால விளைவுகளான மூச்சுத்திணறல், இருமல், கண்ணெரிச்சல், தூக்கமின்மை முதல் நீண்டகால பிரச்சினைகளான ஆஸ்துமா, கண்பார்வை மங்குதல், நுரையீரல் புற்றுநோய், மூளை சம்பந்தமான மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
காரீயம் போன்ற சில வகையான நச்சுப் பொருட்கள் கருவிலுள்ள குழந்தைகளை பாதிப்பதோடு மட்டுமின்றி, பிறந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிப்பதால் நாட்டின் மனிதவள மேம்பாட்டையும் அதனால் நீண்ட கால பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன!
இங்கு வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், பெரும்பாலான இந்நோய்களுக்கு சுற்றுச்சூழல் மாசுபடுவதுதான் ஒரு மிக முக்கிய காரணம் என்பது உணரப்படாமல் இருப்பதுதான்! மனிதனுக்கு மட்டுமின்றி, அவனின் வாழ்வாதாரத்திற்கான விலங்குகள் பறவைகள் போன்றவற்றிற்கும் உடல் நல கோளாறுகளும் மற்றும் இறப்பும் ஏற்படுகின்றன. இவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் கணக்கிட்டால் மொத்த பொருளாதார இழப்பு மிக கணிசமாக அதிகரிக்கும் என்பது தெளிவு.
கரியமில வாயுவை வெளியிடும் நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையங்கள், ரசாயன ஆலைகள், சுரங்கங்கள் மற்றும் ஆட்டோமொபைல் வாகனங்கள் ஆகியன காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணியாகின்றன. காட்டு தீயினாலும், விவசாய மற்றும் ஆலைக் கழிவுகளை எரிப்பதனாலும், நகர்ப் புறங்களில் குப்பைகளை எரிப்பதனாலும், விவசாயத்தில் பூச்சிக் கொல்லி மருந்துகள் மூலமும், செங்கல் சூளைகள் மூலமும், கிரானைட் சுரங்களிலிருந்து வரும் துகள்கள் மூலமும் ஏற்படுகின்றது.
கிராமம் மற்றும் மலைப் பிரதேசங்களில் விறகடுப்பு எரிப்பதன் மூலம் ஏற்பதும் மாசு பெண்களையும் குழந்தைகளையும் பெருவாரியாக பாதிக்கிறது! இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், தொழிற்சாலைகள் தவிர மற்ற ஆதாரங்களை எளிதில் அடையாளம் கண்டு மாசு கட்டுப்பாட்டை மேற்கொள்வதென்பது மிகவும் கடினம்.
நகர்ப்புறங்களில் நாளுக்கு நாள் பெருகிவரும் வாகனங்களின் புகைதான் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன! பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது இதற்கு சிறந்த தீர்வாக அமையும். அதேபோல பிரதம மந்திரி அறிவித்த இலவச எரிவாயு திட்டம், விறகு அடுப்பினால் ஏற்படும் புகை மாசை ஓரளவு கட்டுப்படுத்தும் என நம்பலாம்.
போக்குச்சார் பொருளாதாரம் கூறுவது போல், சுற்றுச்சூழல் மாசுபடுவதனால் ஏற்படும் கொடிய தீமைகளை மக்களுக்கு பொருத்தமான முறையில் எடுத்துரைப்பதன் மூலம் தேவையான தூண்டுதல்களை ஏற்படுத்தி அவர்களின் நடவடிக்கைகளில் நன்மை பயக்கும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்..
தீபாவளி மற்றும் மறுதினம் சென்னையில் காற்று மாசு சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம். பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் காற்று மாசு கடந்த காலங்களை விட குறைந்து காணப்பட்டது. இது மக்களிடம் பசுமை தீபாவளி பற்றிய விழிப்புணர்வு அதிகரித்ததாலேயே ஆகும்.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் டெல்லியில் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு நவம்பர் 1 வரை தடை விதித்தது! மக்கள் விருப்பத்திற்கு எதிராக ஒன்றை தடை செய்யும்போது அது சில எதிர் விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால் தான் தீபாவளிக்கு பிந்தைய நாட்களில் டெல்லியில் காற்றிலுள்ள மாசின் அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவே இருந்தது!
பட்டாசு விற்பனையை தடை செய்வதன் மூலம் சமூகத்தில் ஏற்படும் பொருளாதார இழப்புகளும் அதிகம். சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் சார்ந்த நடவடிக்கைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது நமது அனைவரின் கடமையாகும்! இவர்களுக்கான மாற்று வேலை வாய்ப்புகளை உருவாக்குவது பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். பட்டாசு உபயோகத்தை நீதிமன்றம் மற்றும் அரசு தடை செய்வதைவிட, மக்களே பட்டாசு உபயோகிப்பதை படிப்படியாக குறைத்துக் கொள்வதற்கான தூண்டுதல்களை ஏற்படுத்த வேண்டும்..
சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பதன் மூலம், பெரு வாரியான பொருளாதார இழப்புகளை தடுப்பதோடு மட்டுமின்றி ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூக ஏற்றத் தாழ்வுகளிலும் மாற்றம் காணலாம். சுற்றுச்சூழல் சீர்கேட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக செயல் படுத்துவதன் மூலம் எதிர்கால சந்ததியினரையும் காப்பாற்ற முடியும்!