மலிவான விலையில் மருந்து விற்பனை: 21 வயது இளைஞர் சாதித்தது எப்படி?

மலிவான விலையில் மருந்து விற்பனை: 21 வயது இளைஞர் சாதித்தது எப்படி?
Updated on
3 min read

ஏழை, நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு சார்பில் பிரதமரின் ‘மக்கள் மருந்தகம்’ என்ற பெயரில் ஜெனரிக் மருந்து கடைகள் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. கடந்த நிதியாண்டின் இதன் வருவாய் ரூ.1,095 கோடியாக இருந்தது. இந்நிலையில், மத்திய அரசுக்கு நிகராக, 21 வயது இளைஞர் ஒருவரின் நிறுவனம் மலிவு விலையில் மருந்துகளை வழங்கி சத்தமில்லாமல் சாதனை செய்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த தாணே நகரில் கடந்த 2002-ம் ஆண்டு பிறந்தவர் அர்ஜுன் தேஷ் பாண்டே. இவரது தாயார் மருந்து விற்பனையகத்தில் பணியாற்றியவர். சிறுவயது முதலே தாயாருடன் இணைந்து பயணித்ததில் மருந்து துறையில் அவருக்கு பரிச்சயம் அதிகம்.

நோயாளிகள் மருந்துக்காக அல்லாடுவதும், அதற்கான பணம் இல்லாமல் திண்டாடுவதும் அர்ஜுனின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அவர்களின் கஷ்டத்தைப் போக்க வேண்டும் என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக் கொண்டு ‘ஜெனரிக் ஆதார்’ என்ற பெயரில் ஒரு மருந்துக் கடையை தொடங்கினார்.

அது இன்று ரூ.500 கோடி மதிப்புடைய ஸ்டார்ட்-அப் நிறுவனமாக விஸ்வரூபமெடுத்துள்ளது. அதன் கிளைகள் நாடு முழுவதும் பரவி 2,000-க்கும் அதிகமான கடைகள், 10,000 பணியாளர்கள் என அர்ஜுனின் நிறுவனம் இன்று ஆலவிருட்சமாக வளர்ந்து அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது. அர்ஜுனுக்கு இப்போது வயது 21. ஆனால், அவர் இந்நிறுவனத்தை தனது 16 வயதில் தொடங்கினார். முதலீட்டாளர்களின் கவனம் குறிப்பாக, ரத்தன் டாடாவின் பார்வை ஜெனரிக் ஆதார் மீது விழுந்ததையடுத்து இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அதன் கிளைகள் சென்றடைய தொடங்கிவிட்டன.

ஜெனரிக் ஆதார் நிறுவனர் அர்ஜுனின் குறிக்கோள் மிக எளிமையானது. தேவையான அனைத்து மருந்துகளும் மலிவு விலையில் நோயாளிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதே அது. இதனை சாத்திய மாக்க வேண்டும் என்றால் புதிய வழியை தேர்வு செய்து அதில் பயணிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

90% வரை தள்ளுபடி: சந்தைப்படுத்துபவர்கள், விநியோகஸ்தர்கள், ஸ்டாக்கிஸ்ட்கள் போன்ற இடைத்தரகர்கள் என்ற வழக்கமான சங்கிலித் தொடரிலிருந்து விலகி புதிய வியூகத்தின் அடிப்படையில் நேரடியாக மருந்து நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து இன்று 90 சதவீதம் வரையிலான தள்ளுபடி விலையில் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் விற்பனை செய்து வருகிறார்.

உதாரணமாக, சர்க்கரை நோய்க்கான கிளிம்பிரைடு மருந்து ஒரு ஸ்டிரிப் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஜெனரிக் ஆதார் அதை 5 ரூபாய்க்கு நோயாளிகளுக்கு விற்பனை செய்கிறது. அதேபோன்று, சந்தையில் 55 ரூபாய்க்கு விற்கப்படும் ஒவ்வாமை எதிர்ப்பு மருந்தான லெவோசிட்ரிசனை, அர்ஜுன் நிறுவனம் 6 ரூபாய்க்கு வழங்குகிறது. இதுபோன்று மிக மிக மலிவு விலையில் நோயாளிகளுக்கு விற்பனை செய்யும் மருந்துகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

“நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, 3 அடுக்கு அல்லது நாட்டின் கிராமப் புற பகுதிகளையும் சென்றடைவதே எங்களின் இலக்கு, ஏனெனில், மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் 40 கி.மீ.க்கு அப்பால் இருந்துதான் உண்மையான இந்தியா தொடங்குகிறது" என்கிறார் அர்ஜுன். பிஹாரின் குஷேஸ்வர் அஸ்தானில் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகைக்கு ஒரே ஒரு மருத்துவர், ஒரு மருத்துவமனை உள்ள கிராமத்துக்கு சென்று மருந்தகத்தை நிறுவியதிலிருந்து அர்ஜுனின் தொலைநோக்குப் பார்வையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

மாநில அரசுகள் ஆதரவு: ஜெனரிக் ஆதார் நிறுவனத்தின் உண்மையான சேவை நோக்கத்தைப் புரிந்து கொண்ட பல மாநிலங்கள், அதனுடன் இணைந்து செயல்பட அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதன்படி, அரசு மருத்துவமனைகளில் 700 கடைகளைத் திறக்க உத்தர பிரதேச அரசு ஜெனரிக் ஆதாருடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோன்று, மகாராஷ்டிர அரசும் அனைவருக்கும் மலிவு விலையில் சுகாதார சேவைகளை வழங்க ஏதுவாக அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

வெளிநாடுகளில்: இந்தியாவைத் தாண்டி, நேபாளம், பூடான், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், மியான்மர், வங்கதேசம் போன்ற நாடுகளிலும் ஜெனரிக் ஆதார் தனது கிளையை பரப்பியுள்ளது. கூடிய விரைவில், துபாய், ஓமன், கம்போடியா, வியட்நாம் நாடுகளிலும் ஜெனரிக் ஆதார், தனது மலிவான விலை மருந்து விற்பனை சேவையை தொடங்கவுள்ளதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் அர்ஜுன்.

கால்நடை மருந்துகள்: மனிதர்களுக்கான மருந்துகள் மட்டுமின்றி, கால்நடைக்கான மருந்துகளையும் மலிவு விலையில் விற்பனை செய்ய முன்வந்துள்ளது ஜெனரிக் ஆதார். இதன் மூலம் விவசாயிகளின் செலவுகளை கணிசமாக குறைத்து அவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை தணிக்க முடியும் என்பது ஜெனரிக் ஆதார் நிறுவனரின் நம்பிக்கை. அதன் ஒரு பகுதியாக, ஆந்திராவில் தனது முதல் கால்நடை மருந்தகத்தை திறந்து செயல்படுத்தி வருகிறார் அவர். மருந்துகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, 2030-ல் இந்தியாவுக்கான மருந்து சந்தை 130 பில்லியன் டாலராக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய மருந்து சந்தை 2030-ல் 500 பில்லியன் டாலரை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2018-ல் அர்ஜுன் தனது 16-வயதில் ஆரம்பித்த ஜெனரிக் ஆதார் ஸ்டார்ட் அப் நிறுவனம், தற்போது மாதத்துக்கு 12 லட்சத்துக்கும் அதிமான மருந்து அட்டைகளை (ஸ்டிரிப்) விற்பனை செய்து வருகிறது.

இன்றைய இளைஞர்களால் இதுபோன்று தொடங்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியிலும் சமூக வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகின்றன என்பது மட்டுமல்ல, மக்கள் நலனை மையப்படுத்தும் சிந்தனை இன்னும் உயிரோடு இருக்கிறது என்ற நம்பிக்கையையும் அளிக்கின்றன.

- rajanpalanikumar.a@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in