

உலகில் எந்தத் துறையிலாவது உச்சநிலையை அடைய வேண்டும் என்றால், அதற்கு எதையும் உடனடியாகச் செய்யும் குணாதிசயம் வேண்டும். தள்ளிப் போட்டுக் கொண்டே செல்பவர்கள் பெரிதாக எதையும் சாதிப்பதில்லை. இந்தப் பழக்கத்தைத் தகர்த்தெறிய, கனடா - அமெரிக்க எழுத்தாளர் பிரையன் டிரேசி (Brain Tracy) சொல்லும் 8 உத்திகள் இதோ..
1. பட்டியலிடுங்கள் நீங்கள் தொடர்ந்து பல விஷயங்களை தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்திருப்பீர்கள் அல்லவா ? அவற்றில் எதை உடனடியாக முடிக்க விரும்புகிறீர்கள் என்று பட்டியலிடுங்கள். உங்களுக்கு எது அதிக அளவு வருமானத்தைத் தருமோ, எது உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தருமோ அதன் அடிப்படையில் அந்தப் பட்டியல் இருக்கலாம்.
2. வரிசைப் படுத்துங்கள் இப்போது உங்கள் பட்டியலில் 10 விஷயங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இவற்றை ‘அவசரம்‘ மற்றும் ‘முக்கியம்’ ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றிலிருந்து பத்து வரை வரிசைப்படுத்துங்கள்.
3. ஒன்றை மட்டும் தொடங்குங்கள் உங்களுடைய பட்டியலில் முதல் இடத்தில் உள்ள வேலையை மட்டும் உடனே செய்யத் தொடங்குங்கள். 'ஒன்றே செய்; நன்றே செய்; இன்றே செய்' என்ற பழமொழிக்கேற்ப ஒன்றில் இருந்து தொடங்குங்கள். ஒன்றை மட்டும் தொடங்குங்கள். ஒன்றில் மட்டுமே 100 சதவீத கவனத்தையும் செலுத்துங்கள்.
4. சிறிது, சிறிதாகப் பிரித்து செய்யுங்கள் ஒரு வேலையை முழுமையாக முடிக்கவேண்டும் என்றால், சற்று மலைப்பாகத்தான் இருக்கும். அவற்றை நான்கு அல்லது ஆறு அல்லது எட்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒன்றன்பின் ஒன்றாக அந்த வேலைகளை முடிக்கத் தொடங்கலாம்.
5. பிரித்துக் கொடுங்கள் சிறிது - சிறிதாகப் பிரித்துக் கொண்ட வேலைகளை நீங்களே செய்தாக வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்கள் நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ, உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடமோ அந்த வேலைகளில் சில பகுதிகளைப் பிரித்துக் கொடுக்கலாம். அப்படி கொடுத்த வேலைகளை, அவர்கள் முடிக்கும் வரை, அவர்களைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
6. அவசரம் காட்டுங்கள் குக்கரில் பிரஷர் இருந்தால்தான், அரிசி வேகும். அதுபோல் எந்த வேலையையும் 'அவசரம்' என்று மனதில் எண்ணினால் தான், அது உடனடியாக நடக்கும். எனவே, இன்றைக்கு மாலை 5 மணிக்குள் இந்த வேலையை முடித்து விட வேண்டும் என்று ஒரு சுய இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, உங்களை நீங்களே உந்தித் தள்ளி அந்த வேலையை முடிக்க முயற்சி செய்யுங்கள்.
7. நேரத்தை உருவாக்குங்கள் "ஏன் இந்த வேலை தள்ளிப் போகிறது ?" என்று உங்களிடம் யாராவது கேட்கும் போதெல்லாம், நீங்கள் பொதுவாக சொல்கிற பதில், 'நேரமில்லை சார்' என்பதுதான். இந்த பதிலுக்கு ஒரே விடை, நீங்களே புதிதாக நேரத்தை உருவாக்குவது தான்.
அதாவது, எடுத்த காரியம் முடியும் வரை அதிகாலையில் 4 மணிக்கு எழுந்திருக்கப் பழகுங்கள். இல்லையேல் இரவு 12 மணி வரை முழித்திருந்து அன்றைய இலக்கை நிறைவு செய்யுங்கள்.
8. எல்லாத் தொடர்புகளையும் பயன்படுத்துங்கள் திட்டமிட்ட வேலையை முடிக்க, அதற்கு வேறு யாருடைய உதவி தேவைப்பட்டாலும், வெட்கப்படாமல் அவர்களைத் தொடர்பு கொண்டு அந்த உதவியைப் பெறுங்கள். எல்லாத் தொடர்புகளையும் நாம் உருவாக்கியதற்குக் காரணமே, தேவைப்படும் நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்வதற்குத்தான்.
இந்த எட்டு உத்திகளையும் பயன்படுத்தி நீண்ட நாட்களாகத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த ஒரு வேலையை நீங்கள் முடித்து விட்டீர்களேயானால், அதன் பிறகு உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கத் தொடங்கும். அதுவே உங்கள் வெற்றியின் தொடக்க வாசல்!