

அண்மைக் காலங்களில் சென்னை ஒட்டியம்பாக்கம் பறவை நோக்குதல் பயணங்கள் ஏனோ வழக்கமான மனநிறைவைத் தருவதில்லை. இதற்கு முக்கியக் காரணம் அந்த ஏரியைச் சுற்றி அதிவேகமாக நிகழ்த்தப்பட்டுவரும் நிலப்பயன்பாட்டு மாற்றங்கள்.
ஏரியின் கட்டமைப்பு ஒருவாறு மாறாமல் இருந்தாலும், அதன் மதகுப்பகுதியில் உள்ள வயல்வெளிகளிலும், புதர்க்காடு-புல்வெளிகளிலும் தலைகீழ் மாற்றங்கள்! ஒவ்வொரு வருகையின்போதும் ஒரு வயல்வெளியோ, புல்தரையோ, புதர்க்காடோ புதிய கட்டுமானத் தலமாக உருமாறியிருக்கும்! மஞ்சள் வாலாட்டிகளின் வாழ் நிலங்கள், அவற்றின் ஒப்புதல் இல்லாமலேயே வேலி போடப்பட்டுச் சமன்படுத்தப்பட்டிருக்கும்.