

சென்னை அருகிலுள்ள 'பறவை காணும் இட'ங்களில் (birding spots), ஒட்டியம்பாக்கம் பெரிய ஏரிக்கு முதன்மை இடம் உண்டு. இது, மதுரப்பாக்கம் வரையறுக்கப்பட்ட காட்டுப் பகுதியில், 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஓர் ஏரி. 2017இல் இதை ஒரு பறவை மையமாக நாங்கள்தான் முதன்முதலாக அடையாளப்படுத்தினோம். இந்த ஏரியில் சுமார் 2 கி.மீ. நீளமுள்ள திட்டு, ‘பறவை பார்த்தல்’ நடைப்பயிற்சிக்கு வசதியான ஒரு பாதை.
இதுவரை 172 வகைப் பறவைகள் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒட்டியம்பாக்கம் பெரிய ஏரி, eBird பறவை வலைத்தளத்தால், 'பறவை காணுதல் முதன்மை மையம்' (birding hotspot) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையின் அவசர-அதிரடி-சத்தங் களைத் தாண்டி, சற்று அமைதியான இடத்தில் உள்ளது இந்த இயற்கைப் புகலிடம். மனிதக் கழிவுநீர் கலக்காத, சுத்தமான மழைநீர் வடிகாலால் இந்த ஏரியில் நீர் சேருவது குறிப்பிடத்தக்கது.