

படங்கள்: செந்தில்குமரன்
இந்தியாவின் காட்டு எல்லைப் பகுதிகளில், மனிதருக்கும் யானைக்கும் இடையே ஓர் அமைதியான மோதல் நாள்தோறும் நடைபெற்றுவருகிறது. இரவு நேரத்தில் காடுகளில் இருந்து வெளியேறும் யானைகள், அருகிலுள்ள வேளாண் நிலங்களில் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்துகின்றன.
இது உழவர்களுக்குச் சாதாரண இழப்பு அல்ல; பல மாதங்களாகக் கொடுத்த உழைப்பின் முழுமையான அழிவு. ஏக்கர் கணக்கில் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் ஒரே இரவில் அழிந்துவிடும்போது, அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரமே கேள்விக்குறி ஆகிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 5 லட்சம் உழவர்கள் யானைகளால் ஏற்படும் பயிர்ச் சேதத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
யார் காரணம்?
இந்த நிலைமைக்குக் காரணம், மனிதர்களால் ஏற்பட்ட நிலத்திருத்த மாற்றமே. காடுகள் குறைந்து, யானைகளின் இயற்கை வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், அவை உணவுக்காக மனிதர்களின் வயல்களை நாடுகின்றன.
வேளாண் பயிர்கள் அதிக சுவை - சத்துகளைக் கொண்டவை, எளிதில் கிடைக்கக்கூடியவை, ஒரே இடத்தில் திரளாக உள்ளவை என்பதால், இந்தப் பயிர்கள் யானைகளை அதிகமாக ஈர்க்கின்றன.