

ஆக்கிரமிப்பு உயிரின ஆராய்ச்சியாளர், அறிவியல் ஆலோசகர் இயற்கைக்கான செயல்பாடுகளை முன்னெடுத்தல் (Taking action for nature) என்கிற கருப்பொருளின் கீழ் ஆர்மீனியாவில் உள்ள யெரெவான் நகரில் உயிர்ப்பன்மை (Convention on Biological Diversity –CBD ) உறுப்பு நாடுகளின் (Conference of the Parties COP) 17ஆவது உச்சி மாநாடு அக்டோபர் 19இல் தொடங்கித் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த மாநாட்டில் இந்தியாவைப் பொறுத்தவரை கீழ்க்காணும் ஐந்து முக்கிய அம்சங்களை நமக்குச் சாதகமாக விவாதிக்க வேண்டியது கட்டாயமாகும். வளங்களைத் திரட்டுதல், நிதி ஆதாரங்களைப் பெருக்குதல்; குன்மிங்–மாண்ட்ரியல் உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மை கட்டமைப்பின் (KMGBF) கூட்டு முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான திட்டமிடல், கண்காணிப்பு, அறிக்கை தயாரிப்பு, மறுஆய்வு; பழங்குடி மக்கள் - உள்ளூர்ச் சமூகங்கள் தொடர்பான பிரிவு 8(j) - அதனுடன் தொடர்புடைய விதிகளைச் செயல்படுத்துதல்; மரபணு வளங்கள் தொடர்பான டிஜிட்டல் நிரல்ஒழுங்குத் தகவல் (Digital Sequence Information – DSI); செயற்கை உயிரித் தொழில்நுட்பம் (Synthetic Biology). இந்த ஐந்து முக்கிய அம்சங்களும் நீண்ட பேச்சுவார்த்தை உடன்படிக்கைகளுக்கு வழிவகை செய்யும் என்பது நிதர்சனம்.
நிதிப் பற்றாக்குறை
உலக அளவில் இந்தியா உட்படப் பல வளரும் நாடுகள் உயிர்ப்பன்மை பாதுகாப்புக்காக அதிக அளவில் நிதியைச் செலவு செய்ய வேண்டி உள்ளது. எடுத்துக்காட்டாக 2013-14ஆம் ஆண்டுகளில் பல்லுயிர் பாதுகாப்புக்காக இந்தியா செலவழித்த தொகை ரூ. 9,024 கோடி. இது 2017-18 காலக்கட்டத்தில் உயர்ந்து ரூ.32,207 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போதைய கணக்கிடுதலின்படி 2030இல் ரூ.81,665 கோடி செலவு செய்ய வேண்டி இருக்கும்.
உலகம் முழுவதும் உள்ள உயிர்ப் பன்மையைப் பாதுகாக்க, 2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியைத் திரட்ட வேண்டும் என்று KMGBF வலியுறுத்திவருகிறது. அதேநேரத்தில், இது 700 பில்லியன் டாலர்களாக 2030க்குப் பிறகு உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.