

பவானி ஆற்றுப் பாதுகாப்புக்காகப் போராடிய முன்னோடி சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் மருத்துவருமான சத்தியசுந்தரி காலமானார். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் 1934இல் பிறந்த சத்தியசுந்தரி, திருச்சி ஹோலி கிராஸ் பள்ளியில் படித்தார். திருச்சி வந்திருந்த காந்தியடிகளை நேரில் பார்த்தவர்.
பின்னர் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து, கோபிச்செட்டிப்பாளையத்தில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றினார். 1993ஆம் ஆண்டு, அவரது மருத்துவமனைக்கு வந்த பல பெண்கள் தோல் நோய்கள், தீவிர முடி உதிர்வு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டனர்.
நோய்க்கான காரணத்தை ஆராயத் தொடங்கியபோது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. சிறுமுகை அருகே இயங்கிய ‘சவுத் இந்தியன் விஸ்கோஸ்’ (SIV) ஆலை, சுத்திகரிக்கப்படாத நச்சுக் கழிவை நேரடியாக பவானி ஆற்றில் கலந்து வந்தது. அந்த மாசுபட்ட நீரே மக்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று அவர் சந்தேகித்தார்.
சமூகப் போராளி
1993 மே 13 அன்று, பவானி ஆற்றின் ஆராய்ச்சி நீர் மாதிரியைச் சேகரித்து, சென்னை கிங் நிறுவனத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பினார். ஒரு மருத்துவர், மக்கள் நலனுக்காகச் சமூகப் போராளியாக மாறிய தருணம் அது.
அதன் பிறகு மருத்துவர் ஜீவானந்தத்தின் வழிகாட்டுதலுடன், சமூக- சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பல்வேறு விவசாயச் சங்கங்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து ‘பவானி நதிநீர்ப் பாதுகாப்புக் கூட்டமைப்பு’ என்கிற மக்கள் இயக்கத்தை உருவாக் கினார். அதன் தலைவராக சத்தியசுந்தரி முன்னின்றார்.