

கடந்த சில ஆண்டுகளாகத் தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரம் தண்ணீர்ப் பற்றாக்குறையால் சீர்குலைந்திருப்பது, இப்படியொரு நிலைமை நம்மூரிலும் அரங்கேறுமோ என்கிற பதற்றத்தை உலகெங்கும் பரவலாக்கியிருக்கிறது. அது போன்றதொரு பதைபதைப்பைக் கடந்த ஆண்டு மழையின்மை, நிலத்தடி நீர் வற்றுதல் உள்ளிட்டவற்றால் எதிர்கொண்டது பெங்களூரு.
அந்த நேரத்தில் நிலைமை கட்டுக்குள் வரத் துணைநின்றவர் பெங்களூரு நீர் விநியோகம் - கழிவுநீர் அகற்ற வாரியத் தலைவரான டாக்டர் ராம் பிரசாத் மனோகர் ஐஏஎஸ். இவரால் செயல்படுத்தப்பட்ட ‘ஐந்து சூத்திரங்கள்’, நீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படும் பெருநகரங்கள் அனைத்துக்கும் ஒரு வழிகாட்டுதல்.
“நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, பெங்களூருவின் மக்கள்தொகை 1 கோடியே 40 லட்சம். தேவையான நீரின் அளவு ஒரு நாளைக்கு 310 கோடி லிட்டர். காவிரியில் இருந்து தினமும் 150 கோடி லிட்டர் கிடைத்த நிலையில், மீதமுள்ள 160 கோடி லிட்டருக்கு நிலத்தடி நீரை நம்புகிற சூழலே இருந்தது.
வானிலை மாற்றம், மழையின்மையால் நிலத்தடி நீர் பாதியாகி, சுமார் 40% வரை பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள்தான்” என்று அப்போதைய நிலைமையை விவரிக்கிறார் ராம் பிரசாத் மனோகர்.
இதைச் சீரமைக்க, பெங்களூருவின் 900க்கும் மேற்பட்ட பகுதிகளில் 1,400 சின்டெக்ஸ் ஞெகிழித்தொட்டிகளை அமைத்து, அவற்றில் ‘ஐஓடி’ உணரியை (சென்சார்) பொருத்தி, தண்ணீர் தீர்ந்தவுடன் நிரப்புகிற வகையில் இடங்காட்டி (ஜிபிஎஸ்) வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
டாக்டர் ராம் பிரசாத் மனோகர்