

பாமயன் - சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மைத் துறைகளில் நெடிய அனுபவம் மிக்கவர். 20-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல், வேளாண்மை நூல்களை எழுதியுள்ளார். திணைநெறி வேளாண்மை எனும் வேளாண்மை சிந்தனைப் பள்ளியைத் தொடங்கிக் கற்பித்துவருகிறார்.
ஒரு வரியில் சொல்வது என்றால் தமிழ்ச் சுற்றுச்சூழலியலுக்கு ஓர் மெய்யியல்-தத்துவவியல் (philosophy) அடையாளத்தைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் அறிஞர் என்று பாமயனைக் கூறலாம். சுற்றுச்சூழல் சீர்கெட்டுவிட்டது, வாருங்கள் அதைப் பாதுகாத்து மீட்டெடுப்போம் என்பது நவீன கால சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த புரிதலுக்கான அடிப்படை.
ஆனால் தமிழ்ப் பண்பாடோ, வாழ்க்கையோ இயற்கையை அடிப்படையாகக் கொண்டிருக் கிறது. இயற்கையிலிருந்து பிரிந்த, இயற்கையி லிருந்து அந்நியமான வாழ்க்கை என்பதைத் தமிழ்ப் பண்பாடு கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை. திணையியல் என்பதே இதன் மையம். நிலத்தை ஐந்தாக வகைமைப்படுத்துவது மட்டுமல்லாமல், அந்தத் திணைக்கூறுகளுக்கு இயற்கையான கருப்பொருள்களும் தமிழ்ப் பண்பாட்டில் வகுக்கப் பட்டுள்ளன.