

| ஓவியம்: எம். சுந்தரன் |
தியடோர் பாஸ்கரன் - மாநில அஞ்சல் துறைத் தலைவர் எனும் உயர் பதவியை வகித்தவர். கிழக்கு பாகிஸ்தான் எனப்படும் இன்றைய வங்கதேசத்தில் 1971இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் அஞ்சல் துறைப் பணிகளைச் செய்தவர். இப்போது 86 வயது.
விடாமல் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் விழிப்புணர்வைப் பரப்பிக்கொண்டும் இருக்கிறார். பொதுவாகப் பல ஆளுமைகள் குறிப்பிட்ட ஒரு துறையில் விற்பன்னராக இருப்பார்கள். தியடோர் பாஸ்கரனோ பல்துறை வித்தகர்.
திரைப்பட வரலாறு, சுற்றுச்சூழல், தொல்லியல், கலைகள் எனப் பல துறை சார்ந்து ஆர்வம் கொண்டவர். அவர் கவனம் செலுத்தும் துறைகளில் முதன்மையானது இயற்கை. உலக அளவில் இயற்கை, காட்டுயிர் குறித்த விழிப்புணர்வு பரவலாவதற்குக் காரணமாக இருந்தவர் டேவிட் ஆட்டன்பரோ என்றால், ‘தமிழகத்தின் ஆட்டன்பரோ' என்று தியடோர் பாஸ்கரனைச் சந்தேகமில்லாமல் கூறலாம்.
சுற்றுச்சூழல் மீதான கரிசனம் என்கிற அம்சத்தை மையமாகக் கொண்டவை தியடோர் பாஸ்கரனின் எழுத்தும் பேச்சும். 1970களிலேயே பாஸ்கரன் எழுதத் தொடங்கிவிட்டார். இந்திய சினிமா வரலாறு குறித்தும் இயற்கை-சுற்றுச்சூழல் குறித்தும் ஆங்கிலத்தில் முதலில் எழுதத் தொடங்கினார்.
‘தி இந்து' போன்ற பெயர் பெற்ற இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிவந்தார். ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் எழுதும் வல்லமை படைத்தவர்.
மொழி பெயர்ப்பதிலும் வல்லவர். மா.கிருஷ்ணனின் ‘மழைக் காலமும் குயிலோசையும்' உள்பட தமிழில் பல அரிய நூல்கள் வெளிவரக் காரணமானவர். தமிழில் நவீனப் பசுமை எழுத்துக்கு அடிப்படையாக இருந்தது அவருடைய எழுத்துப் பணி.
பெருந்தொகுப்பு
பெரும்பாலானோர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் தங்கள் முதுமைக் காலத்தைத் தங்களுக்குப் பிடித்த வழிகளில் செலவுசெய்வார்கள். ஓய்வுபெற்ற பின் சுற்றுச்சூழல் சார்ந்து தமிழில் பாஸ்கரன் தொடர்ச்சியாக எழுதத் தொடங்கினார்.
பல தொகுப்புகள் வெளியாகி உள்ளன. 550 பக்கங்கள் கொண்ட ‘கையிலிருக்கும் பூமி ' (உயிர்மை வெளியீடு) எனும் மொத்தத் தொகுப்பு 2018இல் வெளியானது.
இது அவர் எழுதிய 100 சுற்றுச்சூழல் கட்டுரைகளின தொகுப்பு. இந்த நூலில் 7 பிரிவுகளில் (உயிரினங்கள், உறைவிடங்கள், சுற்றுச் சூழல் கோட்பாடுகள், ஆளுமைகள், சுற்றுச்சூழல் விவாதங்கள் உள்ளிட்டவை) கட்டுரைகள் பிரிக்கப் பட்டுள்ளன.
ஒவ்வொரு கட்டுரையும் நேரடியாகவும் எளிமையாகவும் அமைந்திருந்தாலும் அதனதன் அளவில் முக்கியமானது. இந்தக் கட்டுரைகளின் வழி சுற்றுச்சூழல் துறையின் இதுவரை அறியப்படாத மூலை முடுக்குகளுக்கு தியடோர் பாஸ்கரன் நம்மை அழைத்துச்செல்கிறார்.