

உடும்பு | படம்: அபூர்வ் கர்லேகர் |
இயற்கை வேளாண்மை செய்தல், சிறிய மரத்தோட்டம் (arboretum) ஒன்றை உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் 24 ஆண்டுகளுக்கு முன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் 33 ஏக்கர் நிலத்தை வாங்கினோம். நானும் என் தம்பி தி.ராமகிருஷ்ணனும் அங்கே குடியேறினோம்.
வேளாண்மைக்கு ஒதுக்கிய பகுதியைத் தவிர எஞ்சிய நிலத்தில் பல வகை மரங்களை நட்டோம். தாமாக முளைத்த மரங்கள், புல் பூண்டுகள் ஆகியனவும் இப்போது காடுபோல வளர்ந்துவருகின்றன. எங்கள் பகுதியைச் சுற்றிலும் தோட்டங்களும் வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மலைகளும் உள்ளன. புதிதாக உருவான இந்தப் புகலிடத்தில் நாங்கள் கண்ட சில இயற்கை அம்சங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
அரிய மரங்கள்
காட்டில் ஓரின மரங்கள் வளர்ப்பதைக் காட்டிலும் பலவகை மரங்களும் இருப்பதே ஒரு சூழலியல் தொகுதிக்கு நன்மை செய்யும். எனவே, சுமார் நூற்றைம்பது வகை மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம்.
திண்டுக்கல் மாவட்டம் ஒடுக்கத்தில் பழனி மலைப் பாதுகாப்பு இயக்கம் வைத்திருக்கும் நாற்றுப் பண்ணை, புதுச்சேரி ஆரோவில், கேரளக் கானக ஆராய்ச்சிக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளை வாங்கினோம். பெரும்பாலும் வறட்சியைத் தாங்கி வளரும் கன்றுகளையே தேடி வாங்கினோம்.
அழிவின் விளிம்பில் உள்ளவற்றைச் சற்று அதிகமாகவும் மற்றவற்றைக் குறைவாகவும் நட்டோம். சில மாதங்கள் நீரைச் சுமந்து ஊற்றியும் பின்னர் சொட்டு நீர்ப்பாசனம் மூலமும் அவற்றை வளர்த்தோம். இங்கு 2016ஆம் ஆண்டில் மிகப் பெரும் வறட்சி நிலவிற்று. அதில் ஒன்பது வகை மாமரங்கள், பலா, கொய்யா, தென்னை, புன்னை, தேவதாரு, அசோகு உள்ளிட்ட பல வகை மரங்கள் காய்ந்துவிட்டன. வறட்சியைத் தாங்கி வளர்ந்தவை மட்டும் தற்போது எஞ்சியுள்ளன. இப்போது அவற்றுக்கு நீர்ப்பாசனம் தேவையில்லை.