

இயற்கை வாசித்து முடிக்க முடியாத ஒரு பெருநூல். அதன் ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும், ஓர் ஆச்சரியம் நமக்குக் காத்திருக்கும். பொதுவாக மலர்கள் பளிச்சென்ற வண்ணத்தில் மலர்ந்து சிரித்து, மணம் பரப்பி மகரந்தச்சேர்க்கைக்கு வழி அமைக்கின்றன என்பது ஒரு கற்பிதம். உண்மையில் அத்தி வகைகளில் பூக்கள் பளிச்சென்ற வண்ணத்துடன் வெளிப்படையாகப் பூப்பதில்லை.
பச்சைக் காய் போன்று இருப்பவற்றுக்குள் நூற்றுக்கணக்கான நுண் மலர்கள் கூட்டமாக உருவாகின்றன. அதன் காரணமாகவே ‘அத்தி பூத்தாற் போல' என்கிற முதுமொழி உருவானது. ஆல், அரசு, அத்தி எனப் பெரும்பாலான அத்தி மர வகைகளுக்கு இந்த முதுமொழி பொருந்தும்.
அத்தியினங்களின் காய் (syconium), முதிராத சதைத்தோட்டுடன் இருக்கும். இளம் காயின் உள்ளேதான் நுண்ணிய பூக்கள் உண்டாகும். இப்படிப் பெரும் பூந்தொகுப்பே இருக்கும். தமிழ் இலக்கியத்தில் இதற்கு இடப்பட்ட பெயர் கோளி. இந்தப் பூக்களை ஆச்சரியம் என்று நினைத்தால், அதைவிடப் பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது.
பகிர்ந்துறவு வாழ்க்கை
அத்தி வகை மலர்கள் காய்களைப் போன்று மூடிய வடிவில் உருவாகும்போது, எப்படிப் பூச்சிகள் இதன் மலர்களில் மகரந்தச்சேர்க்கை செய்ய முடியும்? பரிணாம வளர்ச்சியில் இயற்கை அதற்குப் பிரத்யேகத் தீர்வுகளைக் கண்டறிந்திருக்கிறது.
சிறுகுளவிகளும் அத்தி மர வகைகளும் Mutualism எனும் பகிர்ந்துறவு வாழ்க்கை முறையை உருவாக்கியுள்ளன. மூடிய காய்களுக்குள் சிறுகுளவிகள் துளையிட்டு உள்ளே சென்று முட்டையிட்டு இனத்தைப் பெருக்குகின்றன.
இப்படி ஒவ்வோர் அத்தியினத்துக்கும் மாறுபட்ட சிறுகுளவிகள் இருப்பதுதான் கூடுதல் ஆச்சரியம். இந்தச் சிறுகுளவிகள் இல்லாவிட்டால் இந்த மரமோ, இந்த மரம் இல்லாவிட்டால் அந்தச் சிறுகுளவிகளோ உலகில் உயிர் வாழவோ, இனப்பெருக்கம் செய்யவோ முடியாது. அத்தி மலரைத் தங்கள் கூடாக, தாய்மடியாக இந்தச் சிறுகுளவிகள் பயன்படுத்திக்கொள்கின்றன. குளவிகள் மகரந்தச்சேர்க்கை செய்தால் மட்டுமே பழமும் உருவாகும்.
ஆண் திறக்கும் பாதை
அத்தியில் மகரந்தச் சேர்க்கை செய்யும் சிறுகுளவி வகை Ceratosolen fusciceps. காய்ப்பூவுக்குள் 3 வகையான மலர்கள் இருக்கும். ஆண் மலர், நீளமான பெண் மலர், மலட்டுப் பெண் மலர் (Gall flower). நுண்ணிய மலர்களிலேயே சிறிதாக இருக்கும் மலட்டுப் பெண் மலரில்தான் பெண் சிறுகுளவி முட்டையிடும்.