

துள்ளிக் குதிப்பதற்குக் கால்கள் அவசியம் என்று நினைப்போம். ஆனால், கிளிக் வண்டுகள் (click beetle) கால்களின் உதவியில்லாமலே தன் உயரத்தைவிட 20 மடங்கு அதிக உயரத்துக்குத் தரையிலிருந்து எழும்புவதை அறிவியல் அறிஞர்கள் ஆச்சரியத்தோடு ஆராய்ந்து வந்தார்கள். அதற்கான விடை அதிவேக எக்ஸ்-ரே ஒளிப்படக்கருவி மூலம் சமீபத்தில் கிடைத்துள்ளது.
இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரை இதற்கான விடைகளை அளித்துள்ளது. இயற்பியல்ரீதியாகவும் பொறியியல்ரீதியாகவும் இது பெரிதும் சுவாரசியம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
திறன் பெருக்கம்: சாதாரணமாக எந்த ஓர் உயிரினமும் உயரே எழும்ப வேண்டுமென்றால், அது தன் தசைகளைச் சுருக்கி விரித்தாக வேண்டும். தசைகளின் சுருங்கி விரியும் தன்மைக்கேற்ப, அது செல்லும் உயரம் தீர்மானிக்கப்படும். ஆனால், கிளிக் வண்டுகள் செல்லும் உயரம் என்பது தசைகளின் சுருக்க விரிவால் நடப்பதல்ல. அப்படி இருந்தால் அது அவ்வளவு உயரத்துக்கு எழும்புவது சாத்தியமில்லை.