

ஊதிய பலூனைத் தலையில் தேய்த்த பிறகு காகிதத் துணுக்குகளுக்கு அருகில் கொண்டு சென்றால், அந்தக் காகிதத் துணுக்குகள் கவர்ந்திழுக்கப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். தலையில் தேய்க்கும்போது நமது முடியிலிருந்து சிறிதளவு எலக்ட்ரான்கள் பலூனின் மேற்பரப்புக்குச் செல்வதால், அது எதிர்மின்தன்மையைப் பெறுகிறது.
எதிர்மின் தன்மையுள்ள இந்த பலூனைக் காகிதத் துணுக்குகளுக்கு அருகில் கொண்டுசெல்லும்போது காகிதத்தின் நேர்மின் துகள்களை பலூன் ஈர்ப்பதால் ஈர்ப்புவிசை ஏற்படுகிறது. ஒன்றுக்கு மற்றொன்று தொடாமலேயே இந்த விசை ஏற்படுவதால் இதை மின்தூண்டல் நிகழ்வு (electrostatic induction) என்கிறோம்.
அதேபோல் பழைய மாடல் கேதோடு கதிர் டிவிக்கு அருகில் செல்லும்போது, நமது கையில் உள்ள முடிகள் அதை நோக்கி ஈர்க்கப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். இதுவும் ஒரு மின்தூண்டல் நிகழ்வுதான்.
ஆச்சரியப்படும் விதமாக இயற்கையின் மிக முக்கிய உயிரியல் நிகழ்வான மகரந்தச் சேர்க்கையும்கூட ஒரு மின்தூண்டல் நிகழ்வு என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் கண்டறிந்திருக்கின்றன. குறிப்பாக, பிரிஸ்டல் பல்கலைக்கழக அறிஞர்களின் ஆராய்ச்சி முடிவு Journal of Royal Society interface-இல் வெளியாகி ஒரு புதிய வாசலைத் திறந்திருக்கிறது.