

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் பக்கத்துத் தோட்டங்களில் இருந்து சிலர் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் பகுதியில் ஒரு காட்டு மாடு (Wild Indian Gaur - Bos gaurus) இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் சேர்ந்து விரட்டியதால் அது வேலியைத் தாண்டிக் குதித்து எங்கள் காட்டுக்குள் புகுந்துவிட்டதாகவும் அதனால் கவனமாக இருக்குமாறு எங்களை எச்சரித்துச் செல்லவே வந்ததாகவும் சொன்னார்கள்.
அது தனியாக வந்திருப்பதால் இங்கே தங்காதென்றும் விரைவில் தானாகவே வெளியேறிவிடுமென்றும் நாங்கள் சொன்னோம். எதற்கும் வனத் துறையினரை அழைக்கலாம் என அனைவரும் வற்புறுத்தினார்கள். அவர்கள் விருப்பத்திற்கு இணங்கி வனத் துறைக்குத் தகவல் கொடுத்தோம்.
சற்று நேரத்தில் அவர்கள் வந்துசேர்ந்தனர். காட்டில் சற்று நேரம் தேடிய பின் தங்கள் முயற்சியை அவர்கள் கைவிட்டனர். இங்கு வளர்ந்துள்ள புதர்களுக்குள் தங்களால் மேற்கொண்டு தேட இயலாதென்றும், அது தானாக வெளியேறிவிடும் என்றும் கூறிச் சென்றுவிட்டனர்.
ஆனாலும் சற்றுக் கூட்டம் சேர்ந்தது. அனைவரும் எப்படியேனும் அதை விரட்டி விடலாம் என முயன்றனர். அது காட்டின் கிழக்குப் புறத்தில் தாழ்வாக இருந்த வேலியைத் தாண்டி வெளியில் எங்கோ சுற்றி அலைந்துவிட்டு, மீண்டும் வேறு வழியாக வேலியைத் தாண்டி எங்கள் காட்டினுள் குதித்துவிட்டது.
ஒன்றும் செய்ய இயலாமல் அனைவரும் அதை விரட்டும் முயற்சியைக் கைவிட்டனர். எல்லாரும் விலகிய பின் இரவில் அதுவும் காட்டிலிருந்து வெளியேறி விட்டது.