

பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடல்–நன்னீர் ஊடாட்டத்தால் உயிர்ப்புடன் இயங்கிய கோவளம்–நெம்மேலி கடலோர ஈரநிலம், தமிழ்நாடு அரசின் சர்ச்சைக்குரிய மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தால் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதன் சூழலியல் முக்கியத்துவத்தையும், அதைச் சார்ந்து வாழும் மக்களின் குரலையும் பதிவுசெய்கிறது ‘நெம்மேலியின் கடைசி ஓதம்' (Nemmeli's Last Tide) என்கிற ஆவணப்படம்.
முட்டுக்காடு முதல் கொக்கிலமேடு வரை சுமார் 26 கி.மீ. பரப்புக்குப் பரவியுள்ள இந்தக் கடலோர ஈரநிலம் 237 வகைப் பறவைகள், 233 வகைத் தாவரங்கள், 16 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கி நிற்கிறது. நாள்தோறும் இரண்டு முறை கடல் ஓதம் புகுந்து வெளியேறும் இயற்கைச் சுழற்சியே இந்த உயிரியல் அமைப்பின் உயிர்நாடியாக உள்ளது.