

பால் ஜாய்ன்சன். முப்பதாண்டுகளுக்கும் மேலாகக் கிழக்கு ஆப்ரிக்காவின் காட்டுப் பகுதிகளில் சுற்றித்திரிந்து படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் ஒளிப்படக்காரர். உகாண்டா, தான்சானியா, ஸாம்பியா ஆகிய நாடுகளில் இவர் எடுத்த படங்களைத் தொகுத்துப் புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்.
2015இல் ஒரு நாள் வடக்கு தான்சானியாவில் உள்ள மேரு மலைப் பகுதியில் உள்ள தன் சிறு அலுவலகத்தில் உட்கார்ந்தபடி, தான் எடுத்த படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட படத்தைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்துவிட்டார்.
அதில் ஒரு கழுகு, தன் இரு கால்களுக்கும் இடையில் தலையைச் சாய்த்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அதாவது, ஒளிப்படக்காரர் பால் ஜாய்ன்சன் அந்தக் கழுகினைப் படமெடுத்தபோது, “யார்டா இந்தப் பையன்?” என்பதுபோலத் தலையைச் சாய்த்துக் கால் இடுக்கு வழியே அவரைப் பார்த்திருக்கிறது.