

பொன்வண்டு பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. நமது குழந்தைப்பருவ நினைவுகளில் பொன்வண்டுக்கு முக்கிய இடம் உண்டு. பொன்வண்டு நமக்குப் பிடிப்பதற்கு ஒரு முக்கியக் காரணம், அதன் ஈர்க்கும் பல் வண்ணம். சாதாரணமாகக் காணப்படும் நிறங்களுக்கும் இதன் நிறத்துக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.
இலையை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் பச்சையாகத்தான் தெரியும். ஆனால், பொன்வண்டின் நிறம் நீங்கள் பார்க்கும் கோணத்திற்கு ஏற்ப மாறுபடும். நாம் பார்க்கும் கோணத்தைப் பொறுத்து வெவ்வேறு வண்ணத்தில் தெரியும். அறிவியல் இதைப் பல்நிற ஒளிர்வு (iridescence) என்கிறது. பொன்வண்டு மட்டுமல்ல மயிலிறகின் வண்ணத்திற்கும், வண்ணத்துப்பூச்சியின் வண்ணத்திற்கும் இதுதான் காரணம்.