

ஓவியம்: எம். சுந்தரன்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராக எழுத்தாளரும் சிந்தனையாளருமான
எஸ்.வி.ராஜதுரை செயல்பட்டுவந்த நேரம். அந்தக் காலத்தில் ஒரு நாள் அவரைச் சந்தித்தபோது, அப்போது வெளிவந்திருந்த ஒரு நூலைக் குறிப்பிட்டுச் சிலாகித்துப் பேசினார். அந்த நூல் ‘தமிழரும் தாவரமும்’, எழுதியவர் தாவரவியல் பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி.
அந்தக் காலத்தைச் சேர்ந்த பெரும்பாலான தாவரவியல் பேராசிரியர்கள், துறைக்குள்ளேயே தங்களைச் சுருக்கிக் கொண்டிருந்தார்கள். மாறாக, நெடிய பண்பாட்டு வரலாற்றையும் இயற்கை சார்ந்த வளமான அறிவையும் கொண்ட சங்கக் கவிதைகள், தமிழ் இலக்கியத்துடன் நவீன அறிவியல் துறையாக வளர்ந்துவிட்ட தாவரவியலை இணைத்து முன்வைக்கும் நோக்கத்தை, ‘தமிழரும் தாவரமும்’ சிறப்புற எட்டியிருந்தது. ஆய்வுப் புலத்தினருக்கான தரத்தைக் கொண்டிருந்த அதேநேரம், வெகுமக்களை மனதில் கொண்டும் அது எழுதப்பட்டிருந்தது.
தமிழர்களின் தனித்துவம்
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் செயல்பாடுகளும் ஆர்வமும் மெல்ல எழுந்து வந்துகொண்டிருந்த நேரம் அது. அதிலும் பறவைகள், காட்டுயிர்கள் மீதே பரவலான கவனம் இருந்ததே அன்றி, தாவரங்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கவில்லை. இந்தப் பின்புலத்தில் ‘தாவரங்கள்தான் தமிழரின் பண்பாட்டைக் கட்டமைக்கின்றன.
தமிழரின் பண்பாட்டைத் தாவரங்களே சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன’ என்கிற கருத்தை மையப்படுத்தி ‘தமிழரும் தாவரமும்’ நூலை எழுதியிருந்தார் கு.வி.கி. தமிழ்த் திணையியலுக்கு அடிப்படையாகத் திகழ்ந்த தாவரங்களைக் குறித்துத் திட்டவட்டமான ஒரு சித்திரத்தை அது தந்தது.
தொடக்க அத்தியாயத்தில் பூமியின் தோற்றம், கண்டங்கள் பிரிதல், மனித குலம் உருவாகிப் பரவிய விதம் போன்றவற்றை அவர் விவரிப்பதில் இருந்தே அறிவியல்பூர்வத்தன்மை மீது அவர் கொண்டிருக்கும் பிடிப்பைப் புரிந்துகொள்ளலாம். ‘உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்லாமல், அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் அறிவியல், வரலாறு விவரிக்கப்பட வேண்டும்’ என அவர் வலியுறுத்துவார்.
இந்த நூலில் அவர் முன்வைக்கும் கருத்துகளில் தலையாயவை: தங்கள் சூழலில் காணப்பட்ட தாவரங்களுடன் ஒன்றிய வாழ்க்கையைப் பண்டைய தமிழர்கள் கொண்டிருந்தனர்; ஐந்திணைக் கொள்கை தமிழர்களுக்கே உரித்தான ஒரு கருத்துருவாக்கம் (concept).
இதுவே உலகின் முதல், அறிவியல் அடிப்படையில் அமைந்த சூழல்தொகுதி (ecosystem) வகைப்பாடாகும்; ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து / நல்லியல்பு இழந்து / பாலை என்பதோர் படிவம் கொள்ளும்’ என்கிற சிலப்பதிகார வரிகள் மூலம் சூழலியல் /சூழல் தொகுதி சிதைவு பற்றி முதன்முதலில் எடுத்துக்காட்டியது பண்டைத் தமிழ் இலக்கியம்; அதேபோல் தாவரங்களுக்குத் தகுந்த பெயரிடுதல் மூலம் இயல் (wild), அயல் (alien/introduced) எனத் தாவரங்களை எளிதில் பிரித்துச் சுட்டிக்காட்டும் முயற்சி தமிழர்களிடம் இருந்தது. எடுத்துக்காட்டு: மல்லிகை – மரமல்லிகை, வாழை – கல்வாழை.