

நான் பிறந்து பன்னிரண்டு வயதுவரை வளர்ந்தது என் தாய்வீடான குன்னூரில் (ஊட்டி). சிறு வயதிலேயே மலர்கள் மீது எனக்கு ஈர்ப்பு உண்டானது. அங்கு இந்திய மலர்களில் இருந்து, அந்நிய மலர்கள்வரை மலை, ஊர் முழுவதும் பூத்துக் குலுங்கும்.
ஒவ்வொரு வீட்டின் முன்புறமும் சிறிய தோட்டம் அமைக்கப்பட்டு ரோஜா, டாலியா, செவ்வந்தி எனப் பல மலர்ச் செடிகள் வளர்க்கப்படும். பிளம்ஸ், பீச், பேரி, ஆப்பிள், பட்டர் ஃபுரூட் (அவகாடோ), கொய்யா, தாட்பூட் (பேஷன்) போன்ற பழ வகைகளும், உடன் சதக்குப்பை, கொத்துமல்லி போன்றவையும் சௌசௌ, கேரட், பீன்ஸ், பீட்ரூட் போன்ற காய்களும் வளர்க்கப்பட்டிருக்கும்.