

ஓவியம்: எம். சுந்தரன்
மரக்கன்று நடுவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பறவைகளுக்குத் தானியம் போடுவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று பல கற்பிதங்கள் நிலவிய காலத்தில் சுற்றுச்சூழலில் ஒளிந்திருக்கும் அரசியலைப் பேசுவது-எழுதுவது, அந்த அரசியலுக்கு எதிராகக் களத்தில் உழைப்பதே சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்கான வழி என்பதை உணர்த்தியவர் பாமயன்.
சுற்றுச்சூழல்-சமூகம்-பொருளியல் சார்ந்த புரிதலில் நுண்ணரசியலை எப்போதும் கவனப்படுத்தக்கூடியவர். தமிழ்நாட்டில் கருவேல மரத்துக்கு எதிராகப் பத்தாண்டுகளுக்கும் மேலாக மிகப் பெரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
அதேநேரம், இது எளிய மக்களின் எரிபொருளாகவும், தென்மாவட்டங்களில் அடுப்புக்கரி உருவாக்கும் தொழில் துறையாகவும் இருக்கிறது. தனியார் பெருநிறுவனங்கள் தங்கள் எரிவாயு விற்பனையை அதிகரிக்கவே, கருவேல மரத்துக்கு எதிரான இந்த அவப்பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதன் பின்னணியில் இருக்கலாம் என்கிற பார்வையை பாமயன் முன்வைத்தார்.
ஒரு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கண்மூடித்தனமாகச்சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தக் கூடாது. மக்கள் சார்ந்து அவருடைய பார்வை அமைய வேண்டும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
அதேபோல் ஒரு நாட்டின் வளத்தை, இறையாண்மையை அழிக்க உலகிலேயே மிக மோசமான ஆயுதமான அணுகுண்டுதான் தேவை என்பதில்லை. ஒரு நாட்டின் உற்பத்திக்கு அடிப்படையாக உள்ள விதையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உணவு, பொருளியல் துறைகளைக் கைப்பற்றி அந்நாட்டின் இறையாண்மையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்பதை உலக அரசியல், பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், தாராளமயப் பொருளாதாரத்தின் ஆபத்துகள் ஆகியவற்றைத் தொடர்புபடுத்திப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே விளக்கியிருக்கிறார்.
சமீபத்திய மேற்காசியப் போரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இப்படிப்பட்ட மறைமுக ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதை இத்துடன் இணைத்துப் புரிந்துகொள்ளலாம்.
கொள்கையும் அடித்தளமும்
மு.பாலசுப்பிரமணியன் என்கிற இயற்பெயரைக் கொண்ட பாமயன், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கவிதை எழுதுவதற்காகப் புனைபெயரை இளம் வயதில் சூடிக்கொண்டார். அவருடைய கவிதைத் தொகுதிகளில் ஒன்று ‘பஞ்சும் பொதியும்’. சர்வோதய இயக்கப் பணிகளில் ஈடுபட்டார்.
காந்தியம், ஜே.சி.குமரப்பா மீது இவருக்குப் பிடிப்பு ஏற்படக் காரணமானவர் காந்தியவாதி க.மு.நடராஜன், யு.ஜி.நாராயணசாமி. இடதுசாரித் தத்துவம் மீதும் பிடிப்பு இருந்தது. இந்தப் பின்னணியில் சமத்துவம், கிராமப்புற மேம்பாடு, உள்ளூர்ச் சமூகம் சார்ந்த பொருளியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனச் சிறிதுசிறிதாக ஆர்வம் விரிந்து, தற்போது இயற்கை வேளாண் துறையில் இடையறாது இயங்கிவருகிறார்.
தொழிற்சங்கவாதியும் மனித உரிமைப் போராளியுமான நெடுஞ்செழியன் உருவாக்கிய அன்றைய ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பில் இணைந்து தமிழ்நாட்டின் தொடக்கக் காலச் சுற்றுச்சூழல் போராட்டங்கள், விழிப்புணர்வுப் பணிகளில் பங்கெடுத்தார்.
அந்த அமைப்பு சார்பில் வெளியான சாண்ட்ரா போஸ்டலின் ‘மணற்கோட்டைகள்’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஜே.பால்பாஸ்கர் நிறுவிய திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் பணிகள், அந்த அறக்கட்டளை வெளிக்கொண்டுவந்த ‘சுற்றுச்சூழல் புதிய கல்வி’ இதழின் பொறுப்பாசிரியர் பணி உள்ளிட்டவற்றிலும் பாமயன் ஈடுபட்டார்.