

குயில் பாட்டு, குயிலுக்குப்பம், குயிலே குயிலே, சின்ன மணிக் குயிலே, மணியே மணிக்குயிலே, மாங்குயிலே பூங்குயிலே என இளையராஜா பாடல்களுக்கு இசை கொடுத்த குயில்கள், தமிழ்ப் பண்பாட்டில் தவிர்க்க இயலாதவை.
தமிழ் நிலத்தை இசையால் நனைத்த இசைப் பறவைகள் குயில்கள். கறுப்பு நிறமுடைய காகத்தைப் போல குயில் எள்ளி நகையாடப்படாமல் இருப்பதற்கு, அதன் குரல் இனிமையாக இருப்பதுகூடக் காரணமாக இருக்கலாம்.
குயில் கதை
தமிழ்நாட்டின் காவிரிப் படுகை ஊர்களில், அக்கா குயில் (Common Hawk Cukoo) கூவுவதை வைத்து, அந்த ஆண்டு நீர்ப்பெருக்கு எவ்வாறு அமையும் எனப் பொதுமக்கள் கணிப்பர். அக்கா குயில் பற்றிய நாட்டார் கதை ஒன்று உள்ளது: “ஆடி மாசம் காவிரி ஆத்துல தண்ணி வரப்ப அக்கா குயிலும் தங்கச்சி குயிலும் தண்ணி குடிக்க போச்சுங்களாம். ஆத்துல அதிகமா தண்ணி வந்து, அக்கா குயில் ஆத்து நடுவுல மாட்டிக்கிச்சாம்.
அக்கா குயிலக் காணோம்னு தங்கச்சி குயில் கரையில நின்னு கத்திக்கிட்டே இருந்துச்சாம். ஆனா, அக்கா குயில் ஆத்து சுழல்ல சிக்கி செத்துருச்சாம். அது தெரியாம தங்கச்சிக் குயில் இப்பவும் அக்கா குயில் திரும்ப வந்துரும்னு ‘அக்கா அக்கானு’ கத்திட்டே இருக்கு. அதனாலதான் இது பேர் அக்கா குயில்.” இது அக்கா குயில் கூவுவதைப் பற்றிய ஒரு கதை என்றாலும், ஆடி மாசம் இக்குயில் கத்தும் என்கிற நாட்டார் மக்களின் உற்றுநோக்கல் இதில் வெளிப்படுகிறது.