

நிலத்தில் வாழ்ந்த உயிரினங்களில் டைனசோர் வாயைப் பிளக்க வைக்கும். டைனசோர் காலத்தில் கடலில் வாழ்ந்து மறைந்துபோன உயிரினம் அமோனைட் (Ammonites). உலகக் கடல்களில் ஆயிரக்கணக்கான இனங்களாக இவை பரிணமித்து வாழ்ந்திருக்கின்றன. சுழல் வடிவ ஓடுகளால் தனித்துவமாக அடையாளம் காணப்படும் அமோனைட்டுகள் அறிவியல் உலகில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.
கணவாயின் உறவினர்கள்
இன்றைய அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி அவற்றைச் சுற்றியுள்ள பல பகுதிகள், சுமார் 10 கோடி முதல் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்புவரை பரந்த கடல் பகுதியாக இருந்தன.
அக்காலத்தில் வாழ்ந்த எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் இன்று தொல்லுயிர்ப் புதைபடிவங்களாக நமக்குக் கிடைக்கின்றன. எனவே, தமிழ்நாட்டின் இந்தப் பகுதிகள் இந்தியாவின் முக்கியமான புதைபடிவக் களங்களாகக் கருதப்படுகின்றன.
இங்கு காணப்படும் கிரிட்டேசியஸ் காலப் பாறைகள், தென்னிந்தியாவில் கிடைக்கும் மிகச் சிறந்த கடல்வாழ் உயிரினப் புதைபடிவங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக, அமோனைட்டுகள் இப்பகுதியில் பெருமளவில் கண்டறியப்பட்டுள்ளன.
அமோனைட்டுகள் மெல்லுடலிகள் (Mollusca) தொகுதியைச் சேர்ந்த கடல்வாழ் தலைக்காலி உயிரினங்கள் (Cephalopods). இவை அமோனாய்டியா (Ammonoidea) என்கிற துணைப்பிரிவைச் சேர்ந்தவை. இவை டெவோனியன் காலம் முதல் கிரிட்டேசியஸ் காலத்தின் இறுதிவரை உலகின் பெருங் கடல்களில் வாழ்ந்திருக்கின்றன.
இவைதற்போதைய கணவாய் (Squid), சடைக் கணவாய் (Octopus) போன்ற உயிரினங்களின் தொன்மையான உறவினர்களாகக் கருதப் படுகின்றன. சுமார் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி, 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த இவை, அப்போது நிகழ்ந்த பேரழிவில் முற்றிலும் அழிந்துபோயின.