

வெள்ளைக்கண் வைரி | படம்: கோஷி கோஷி |
பருந்துகளின் பார்வைத் திறன் அளவிடற்கரியது. மிக உயரத்தில் பறந்துகொண்டே தமக்கான இரையைப் பிடிக்க அவை தயாராகிவிடுகின்றன. மிக உயரத்தில் பறப்பதால் என்னால் அவற்றை மிகச் சரியாக அடையாளம் காண இயல்வதில்லை.
தேன் பருந்தின் (Oriental Honey Buzzard) அழைப்பொலியைப் பதிவுசெய்து காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ஜெகநாதனுக்கு அனுப்பித் தெரிந்துகொண்டேன். இப்போது அதன் அழைப்பொலி என் மனத்தில் நன்றாகப் பதிந்துவிட்டதால் அதன் வரவை உணர்கிறேன். ஒருமுறை உயரத்தில் பறக்கும்போதும் அவர் அதை எனக்குக் காட்டினார்.
வெள்ளைக்கண் வைரியையும் (White Eyed Buzzard) குரல் பதிவின் மூலமே அடையாளம் காண முடிந்தது. இதுபோல் இரவாடிப் பறவைகளையும் பகலில் பார்க்க இயலாத பறவைகளையும் குரல் பதிவை வைத்தே இனம்காண முடிகிறது.
கருந்தோள் பருந்தின் (Black Shouldered Kite) அழகு கண்ணைக் கவரும். வெண்மையும் கருமையும் இணைந்த அழகு அது. கண்களும் தோள் பகுதியும் கருமை வண்ணம். உடம்பு வெண்மை வண்ணம். அதை அருகிலிருந்து நன்றாகக் காண ஒருநாள் வாய்த்தது. அது வீட்டிற்கு அருகில் மின்கம்பியில் ஒரே இடத்தில் சற்று நேரம் உட்கார்ந்திருந்ததால் நன்றாகப் பார்க்க முடிந்தது.
ஆறு மணிக் குருவிகள்
வல்லூறு (Shikra) தோற்றத்தில் சற்று அக்காக்குயிலை ஒத்திருக்கும். அதைப் பலமுறை பார்த்துவிட்டேன். அதைக் கண்டதும் அணில்களும் தவிட்டுக் குருவிகளும் வேகமாகக் கூவிக்கொண்டே சுற்றும்.