

அமேசான் ஆறு முதல் அடையாறு வரை பச்சைப் பசேல் இலைகளையும் ஊதா மலர்களையும் கொண்டு நீர்நிலைகளை அலங்கரிக்கும் ஆகாயத்தாமரை, இயற்கைச் சமநிலையைச் சீர்குலைத்து, நீர்நிலைகளின் உயிரோட்டத்தைச் சிதைக்கும் ஆக்கிரமிப்புத் தாவரம்.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN), உலகின் மிக மோசமான 10 களைத் தாவரங்களில் ஒன்றாகவும், 100 ஆக்கிரமிப்பு இனங்களில் ஒன்றாகவும் ஆகாயத்தாமரையை அடையாளப்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டைத் தாயகமாகக் கொண்ட இந்தத் தாவரம், 19ஆம் நூற்றாண்டில் அழகான பூக்களுக்காகவும் இலைகளின் வடிவத்துக்காகவும் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.
1884இல் நியூ ஆர்லியன்ஸ் கண்காட்சியில் இத்தாவரம் உலக அளவில் கவனத்தைப் பெற்றது. அதன் பிறகு, இதன் அழகால் இந்தியா உள்படப் பல ஆசிய நாடுகளுக்கும் கொண்டுவரப்பட்டது. இன்று இந்தியாவில் ஆறுகள், ஏரிகள், பாசனக் கால்வாய்களை ஆக்கிரமித்து, ஒட்டுமொத்த நீர் மேலாண்மைக்கும் முட்டுக்கட்டையாக இத்தாவரம் நிற்கிறது.
ஏன் அழிக்க முடிவதில்லை?
ஆகாயத்தாமரையை நீர்நிலைகளிலிருந்து அகற்றுவது என்பது தரையில் இருக்கும் ‘பாதரசத்தை’ கையால் பிடிப்பதைப் போன்றது. இதன் அசுர வளர்ச்சிக்கு அதன் ‘தழைவழி இனப்பெருக்க’ (Vegetative) முறையே முக்கியக் காரணம். இதன் தண்டிலிருந்து உருவாகும் ‘ஓடுகொடிகள்’ (Stolons) மிகவேகமாகப் புதிய கொடிகளை உருவாக்கி, சங்கிலித் தொடராகப் பரவுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஒரு குளத்தின் மூலையில் இருக்கும் இரண்டு ஆகாயத்தாமரைகள், வெறும் 120 நாள்களில் சுமார் 1,200 கொடிகளாகப் பெருகி அந்த நீர்நிலையை முழுமையாக மூடிவிடும். அதைவிடப் பெரும் சவால் என்னவென்றால், இதன் விதைகள் நீர்நிலையின் அடிப்பகுதியில் உள்ள சேற்றில் சுமார் 20 - 30 ஆண்டுகள் வரை ‘உறக்க நிலையில்’ (Dormancy) இருக்கக்கூடியவை.
மேற்பரப்பில் இருக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றிவிட்டாலும், மழைக்காலத்தில் மீண்டும் முளைக்கும் திறன் இவற்றின் விதைகளுக்கு உண்டு! ஆகாயத்தாமரை, இவ்வளவு செழிப்பாக வளர்வதற்குச் சுற்றுச்சூழல் சீர்கேடும் முக்கியக் காரணம்.