

இந்தியாவின் காட்டு எல்லைப் பகுதிகளில் மனித–யானை எதிர்கொள்ளல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒரு மிகப்பெரிய சவால். இந்த எதிர்கொள்ளல்களைக் குறைக்கும் பணியில் ஆர்ப்பாட்டமின்றிச் செயல்பட்டு வரும் முக்கியக் களப்பணியாளர்கள் ‘வேட்டைத் தடுப்புக் காவலர்கள்’ என அறியப்படும் ‘ஆன்டி போச்சிங் வாட்சர்கள்’, ‘எலிபெண்ட் டாஸ்க் ஃபோர்ஸ்’, ‘ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்’, ‘ஹாத்தி மித்ரர்கள்’ ஆகியோர்.
அவர்களில் பலர் காட்டை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். பல தலைமுறைகளாகக் காடுகளுடன் உறவாடி வாழ்ந்து வந்த அனுபவத்தின் காரணமாக யானைகளின் நகர்வுகள், அவை பயன்படுத்தும் வழித்தடங்கள், தண்ணீர், உணவு தேடிச் செல்லும் பாதைகள் போன்றவற்றை நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால் இரவு நேரத்திலும் யானைகள் எந்தத் திசையில் நகர்கின்றன என்பதை எளிதாக அவர்களால் கணித்துவிட முடிகிறது.
ஆபத்தான பணி
ஒரு கிராமத்துக்குள் யானைகள் நுழைந்ததாகத் தகவல் வந்தவுடன், இந்தக் குழுக்கள் உடனடியாகக் களத்தில் இறங்குகின்றன. யானைகளைக் காயப்படுத்தாமல், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் அவற்றைப் பாதுகாப்பாகக் காடுகளுக்குள் திருப்பி அனுப்புவது மிகுந்த அனுபவமும் ஒருங்கிணைப்பும் தேவைப்படும் ஒரு செயல்.