

பெரிதும் அறியப்படாத செருந்தி என்னும் அழகு தாவரம், Mickey Mouse Bush (அறிவியல் பெயர்: Ochna obtusata) என்கிற ஆங்கிலப் பொதுப் பெயரால் அழைக்கப்படுகிறது. தமிழில் சிலந்தி, பழலக்கோணை, பஞ்சாரம் போன்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. கபிலரின் குறிஞ்சிப்பாட்டு முதலான இலக்கியங்களில் இது செருந்தி என்றே கூறப்பட்டுள்ளது.
இது இந்தத்தாவரத்தின் தொன்மையான பண்பாட்டு, சூழலியல் தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. இத்தாவரம் நெய்தல் நிலத்திற்குரிய தாவரமாகவே தமிழ் இலக்கியங்களில் அறியப்படுகிறது.
குறிஞ்சிப்பாட்டில் கபிலர் செருந்தி மலரை ‘மணித்துணர்ச் செருந்தி' என்கிறார். இதற்கு நீலமணி போன்ற அரும்புகளை உடைய செருந்தி என்று பொருள். ‘பருதி அம்செல்வன் போல் நனை உமிழ்த்த செருந்தியும்’ - என்பது கலித்தொகைப் பாடலில் வரும் ஓர் அழகிய உவமை வரி. சூரியனின் கதிர்கள் போன்ற மலர்களுடன் செருந்தி தாவரம் காட்சியளிப்பதாக நச்சினார்க்கினியர் விளக்குகிறார்.
கறுப்பும் சிவப்பும்: பெரும்பாலும் சமவெளிகளில் உள்ள புதர்க்காடுகள், வறண்ட இலையுதிர் காடுகள், பசுமைமாறாக் காடுகள்வரை பரவலாக வளரக்கூடிய புதர்ச் செடி-சிறிய மர வகையாகும். மலர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை மலர்கின்றன. வசந்த காலம், கோடைக் காலத் தொடக்கத்தில் பூக்கத் தொடங்குகிறது.