

சங்க இலக்கியத்தில் அதிகம் பாடப்பட்ட மலர்களில் ஒன்று, தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள். மாறுபட்ட பூ இதழ்களுடன் சட்டென்று ஈர்க்கும் இதன் செந்நிறமலர் அழகானது.
அதன் காரணமாகவே ஆங்கிலத்தில் பேரொளி (குளோரியோசா) எனப்பட்டது. கார்த்திகை மாதத்தில் பூப்பதால் கார்த்திகைப்பூ எனப் பெயர் பெற்றது. ஈழத்தில் கார்த்திகைப்பூ என்றே அழைக்கப்படுகிறது. மக்கள் வழக்கில் கலப்பைக் கிழங்கு, கண்நோவுப் பூண்டு எனப்படுகிறது.
மூலிகை ஏறுகொடியான இதன் அகன்ற இலைகளின் நுனி குறுகிப் பற்றுக்கம்பியாகச் சுருண்டிருக்கும். அருகில் உள்ள பிடிமானத்தை இவை பிடித்துக்கொள்ளும். கீழ்நோக்கி இருக்கும் இதன் வெளிர் பச்சை மொட்டு, மேல்நோக்கி விரிந்து மலரும்போது மஞ்சள்-சிவப்பு, அடர்சிவப்பு நிறத்துக்கு மாறும். 8 செ.மீ. முதல் 10 செ.மீ. நீளம் கொண்ட மலரின் ஆறு பூவிதழ்கள் வளைந்து, நெளிந்து இருக்கும். விதைகளும் சிவந்த நிறமுடையவை.
நஞ்சும் மருந்தும்: கோல்சிசைன் (colchicine), தொடர்புடைய ஆல்கலாய்டு களைக் கொண்ட தாவரம் என்பதால் இது நஞ்சானது. விதைகள், கிழங்குகள் நஞ்சுடையவை. தண்டு, இலைகள் தோலில் பட்டால் அரிக்கும்.
இதன் கலப்பை வடிவக் கிழங்கு வெண்மையாகப் பருத்துக் கிளைத்திருக்கும். சித்த மருத்துவத்தில் வாத நோய்கள், கீல்வாதத்துக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களில் மருந்துக்காகப் பயிரிட்டு வளர்க்கப்படுகிறது.