

ஆத்தி/ஆர் மலர், மந்தாரை மலர், திருவாட்சி மலர்
சென்னையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் நேரத்தில் ஊரெங்கும் பரவலாக வளர்க்கப்பட்டுள்ள மந்தாரை (Bauhinia purpurea) மரங்களில் பூக்கள் மலர்ந்து சிரிக்கின்றன. இதே பேரினத்தின் வேறு சிற்றினங்களான ஆர்/ஆத்தி (அத்தி அல்ல) மரம் குறித்துத் தேட ஆரம்பித்தேன்.
பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் ‘தமிழரும் தாவரமும்’ நூல் வெளியான காலத்தில் இந்த மரத்தைப் பற்றி அறிந்தது முதல், இதைத் தேடும் ஆவல் அதிகரித்தது. காரணம், அதுவே சோழர்களின் குடிப்பூ. இந்தப் பேரினத்தில் 200 சிற்றினங்கள் உள்ளன.
இந்தச் சிற்றினங்களுக்கு Bauhinia என்கிற அறிவியல் பெயர் வருவதற்குப் பிரத்யேகக் காரணம் உண்டு. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஸ்விட்சர்லாந்து-பிரெஞ்சுத் தாவரவியல் இரட்டையர்களான யோஹான், கஸ்பார் பாகினியா ஆகியோரே இந்தப் பெயருக்குக் காரணம்.
இந்தப் பேரினத் தாவரங்களின் இலைமடல்கள் இரண்டும் இரட்டையர்களைப் போலவே ஒன்றுபோலிருக்கும் என்று வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னாயே கூறியுள்ளார்.
ஆத்தி: மலர்களின் பெயர்களால் நிலத்திணைகளைப் பண்டைத் தமிழர்கள் அடையாளப்படுத்திய அதேநேரம், தாவரங்களும் மலர்களும் நமது பண்பாட்டின் பல்வேறு வகைகளில் முதன்மை அடையாளங்களாகத் திகழ்ந்தன. இன்றைய தேசியப்பூ, மாநிலப்பூவைப் போல, மூவேந்தர்களுக்கும் அந்தக் காலத்தில் குடிப்பூ இருந்தது.
சோழர்களை அடையாளப்படுத்துவதாக ஆத்தி/ஆர் (Bauhinia racemosa/Cluster Bauhinia) திகழ்ந்தது. சேரர்களுக்குப் பனை, பாண்டியர்களுக்கு வேம்பு. மந்தாரை பரவலாகக் காணப்பட்டாலும், ஆத்தியை அதுபோல் பார்க்க முடிவதில்லை.
போந்தை வேம்பே ஆர்என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல்காப்பியம், புறத்திணை இயல். 5)