எங்கும் தழைக்கும் ஆல்! | ஆயிரம் மலர்களே மலருங்கள் 18

எங்கும் தழைக்கும் ஆல்! | ஆயிரம் மலர்களே மலருங்கள் 18
Updated on
3 min read

அத்தி வகைகளில் மூன்று மரங்கள் இந்தியாவில் மிகப் பரவலாக வளர்க்கப்பட்டுள்ளன: ஆல், அத்தி, அரசு. தமிழ்நாட்டிலும் இந்த மூன்று மரங்களைப் பரவலாகக் காணலாம். காலத்தில் முந்தைய தொல்காப்பியத்தில் ஆல் பாடப்பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டில் அழுத்தமாக இடம்பிடித்த மரங்களில் ஆலமும் ஒன்று.

நமது கிராமங்கள், கிராமங்களைக் குறித்த திரைப்படங்கள், ஓவியங்கள், காட்சிகள் ஆல மரம் இன்றி நிறைவடைவதில்லை. அந்த அளவுக்கு நம் பண்பாட்டிலிருந்து பிரிக்க முடியாததாக, ஆழமாக மனதில் பதிந்த மரங்களில் ஒன்று ஆல்.

ஆல, அரச மரங்களை மையமாகக் கொண்டு கிராமத்து நாட்டார் தெய்வக் கோயில்கள் இருப்பதும், அந்த மரத்தடியில் ஊர்-பஞ்சாயத்துக் கூட்டங்கள் நடைபெறுவதும் வழக்கம். காரணம், இந்த மரங்கள் பரந்து வளரக்கூடியவை. இவற்றின் நிழலில் பெரும் கூட்டங்கள் கூட முடியும்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு வாழ்வ தாலும், விழுதுகளின் துணையுடனும் ஆலமரங்கள் பக்கவாட்டிலும் பரந்து விரிந்து வளர்கின்றன. ‘ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி’ என்கிற முதுமொழி, இப்படித் தழைத்து வளர்வதையே குறிப்பிடுகிறது. பரந்த ஆல மரங்களில் இருந்து விழுதுகள் கீழே தொங்கி நிலத்தில் வேர்பிடித்து, பிடிமானம்போல வலுவான மரக்கிளைகளைத் தாங்கி நிற்கும். விழுதுகளே ஆல மரத்துக்கு அடிப்படை.

பூக்களும் பூச்சிகளும்: விழுதுகளே ஆலத்துக்குத் தனித்துவத்தைத் தருகின்றன. மரம் 50-65 அடி உயரத்துக்கு வளரும். பசுமைமாறாத் தாவரமான இந்த மரத்தின் பட்டைகள், இலைகளில் இருந்து பால் வரும். முட்டை வடிவ இலைகள் பளபளப்பாகத் தடித்து இருக்கும்.

இலைகளுக்குக் கீழே மலர்களைக் கொண்ட காய்கள் இரட்டை இரட்டையாகத் தோன்றும். ஒரு செ.மீ.க்கும் குறைந்த அளவில் பச்சை நிறத்தில் உள்ள காய்க்கு உள்ளேதான் மலர் இருக்கும், மணமிருக்காது. காய்களுக்கு உள்ளே மெல்லிய தூவிகளைக் கொண்ட மலர் கூட்டமாக இருக்கும்.

ஒவ்வோர் அத்தி மர வகைக் காய்க்குள்ளும் பிரத்யேகச் சிறுகுளவிகள் துளையிட்டுச் சென்று முட்டையிடும். ஆலங்காயில் முட்டையிடுவது Eupristina masoni என்கிற சிறுகுளவி. குளவிகள் மகரந்தச்சேர்க்கை செய்த பிறகே காய் பழமாக மாறும். காய்க்குள் இருக்கும் பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். பழுக்கும்போது உள்ளே இருக்கும் பூக்கள் மீது சதைப்பற்று உருவாகி அடர்பழுப்பு நிறத்துக்கு அவை மாறும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in