

காயாம் பூ | படங்கள்: மா.அழகப்பன் |
சென்னை நகர முக்கியச் சாலைகளிலும், பூங்காக்களிலும் இளஞ்சிவப்பு நிறப்பூக்கள் மலர்ந்திருக்கின்றன. செர்ரி பூக்கள் பூத்து விட்டன என்று இணையம் முழுதும் பேச்சு. ஒளிப்படம், காணொளி எடுப்பதற்கென்றே கூடுகிறது பெருங்கூட்டம். வசந்த காலம் தொடங்கிவிட்டது என்று இணையம் எங்கும் பரப்புரை நிகழ்கிறது.
உண்மையில் இப்படி இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்திருப்பது செர்ரி மலர் அல்ல. ஆங்கிலத்தில் Rosy Trumpet Tree / Tabebuia rosea எனப்படும் தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட மரம். அயல் மரமான இம்மரத்திற்குச் செங்குழல் பூ, வசந்தராணி என்று தமிழ்ப் பெயர்கள் உள்ளன.
இதே வகையைச் சேர்ந்த Tabebuia argentea என்கிற மரங்களும் ஆங்காங்கே மஞ்சள் நிறத்தில் பூத்துள்ளன. இவை இரண்டும் அயல் தாவரங்கள். பூவின் அழகிற்காக வளர்ப்புத் தாவரங்களாக நமக்கு அறிமுகம் செய்யப்பட்டவை. பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இவை நம் சூழலுக்குப் பெரிய நன்மைகள் செய்வதில்லை.
சென்னை மட்டுமல்ல, பெங்களூருவிலும் சாலையோரங்களில் இந்தச் செங்குழல் பூ மரம் பரவலாக நடப்பட்டதற்குக் காரணம் வனத்துறை அதிகாரி எஸ்.ஜி.நெகின்ஹால் என்று பாராட்டப்படுகிறார். உண்மையில் இந்த அந்நிய மரம் பெங்களூருவில் தேவையின்றி அதிக அளவில் வளர்க்கப்பட்டிருப்பது யாருடைய கண்ணையும் உறுத்தவில்லை.