

பன்மைத்துவம், நறுமணம், இனிப்பு, பிராந்திய அடையாளங்கள் காரணமாக உலகில் மிகவும் கொண்டாடப்படும் பழங்களில் ஒன்று இந்திய மாம்பழம்.
தென்னிந்தியா முழுவதும் பல வகைகள் உள்ளன- அல்போன்சோ, செந்தூரம், சேலம் பெங்களூரா, மல்கோவா, மல்லிகா, இமாம் பசந்த், ஜவாரி, பங்கனப்பள்ளி, ரசாலு, தோத்தாபுரி. இந்த அறுவடைப் பருவம் முடியும் தறுவாயில் பஞ்சவர்ணம், ருமானி, நீலம் போன்ற இன்னும் சில வகைகள் வரும்.
அதேநேரம், சாதாரணமாக இரண்டு கிலோ மாம்பழம் வாங்கக்கூடிய வாடிக்கையாளர்கள், இந்த ஆண்டு இரண்டு மாம்பழங்களை மட்டுமே வாங்குவதாகச் சில்லறை விற்பனையாளர்கள் கூறுகிறார்கள். இந்திய கோடைக்காலத்துடன் உணர்வுபூர்வமாகப் பிணைக்கப்பட்ட ஒரு பழத்தின் இன்றைய பரிதாப நிலை இது.
இமாம் பசந்த் வரவு குறைந்திருக்கிறது. அல்போன்சோ, மல்கோவா, அரிதான சேலம் பெங்களூரா (மிகவும் இனிப்பானது, லேசான நார்ச்சத்தும் சுவையும் கொண்டது) போன்றவை கிடைத்தன. ஜவாரி ஓர் அரிய, வித்தியாசமான பழம் - அடர் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறம், சதைப்பற்றுடன், உருண்டையாக, சுவைமிக்கதாக இருந்தன. இந்தப் பழங்கள் இயற்கை முறையில் பிரத்யேகமாக விளைவிக்கப்படுபவை.
பெருகும் ஆபத்துகள்
அதேநேரம், ஆந்திராவிலும் இந்தியாவின் பல கிராமப்புறங்களிலும் பல மாந்தோப்புகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காரணம், மா விவசாயம் லாபகரமானதாக இல்லை என்பதே. மேலும் ஆண்டு முழுவதற்குமான வாழ்வாதாரத்திற்கு மாவையே அந்த விவசாயிகள் சார்ந்திருக்கிறார்கள்.