

சில மாதங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலுக்குப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கச் சென்றிருந்தோம். அப்போது போபாலில் உள்ள பெரிய ஏரியைப் பார்வையிட்டபோது, அதன் ஒரு பகுதி முழுவதும் பச்சை இலைகளால் மூடப்பட்டிருந்தது.
அருகில் சென்றபோதுதான் அவை சிங்கரா (Trapa) தாவரங்கள் என்பதை அறிந்தேன். அப்போது படகில் ஒருவர் அதன் கனிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்.
“இது எங்களுடைய வாழ்வாதாரங்களில் ஒன்று. இந்தக் கனியை விற்றும் வருமானம் கிடைக்கிறது. எங்கள் பகுதியில் பலரின் அன்றாட உணவிலும் இதற்கு முக்கிய இடம் உண்டு” என்றார் அந்தப் படகோட்டி.
சிங்கரா என்றால்?
சிங்கரா (Trapa) என்பது குளங்கள், ஏரிகள், சதுப்புநிலங்கள் போன்ற நன்னீர் நிலைகளில் வளரும் நீர்வாழ் தாவரம். இதன் வேர்கள் சேற்றில் பதிந்திருக்க, இலைகள் நீரின் மேற்பரப்பில் மிதக்கும். நீருக்குள் உருவாகும் முள் போன்ற கொம்புகளைக் கொண்ட இதன் கனிக்குள் மாவுச்சத்து நிறைந்த வெண்மையான விதை காணப்படுகிறது. இதுவே உணவாகப் பயன்படும் சிங்கரா கனி.
நீரில் மலரும் அதிசயம்
சிங்கரா நீரிலேயே மலர்ந்து கனியும் தனித்துவமான தாவரம். கோடைக்காலத்தில் நீரின் மேற்பரப்பில் சிறிய வெள்ளைப் பூக்கள் மலர்கின்றன. பின்னர் நீருக்குள்ளேயே கனிகள் உருவாகி வளர்கின்றன.