

பார்த்தீனியம்
அயல் ஆக்கிரமிப்புத் தாவரமான பார்த்தீனியம் (Parthenium hysterophorus L.) ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் ஏழு கொடிய களைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இக்களைச்செடி 70க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுகிறது. இதன் தாயகம் மத்திய அமெரிக்கா, மத்திய தெற்கு அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் உள்ளிட்ட நாடுகள்.
1814இல் இந்தியத் தாவரவியல் ஆய்வு முன்னோடியாகக் கருதப்படும் வில்லியம் ராக்ஸ்பர்க், இந்தியாவில் இந்தக் களை காணப்படுவதாக முதன்முதலில் பதிவுசெய்தார்.
அதன் பரவல் அப்பொழுது பெரிதாக இல்லை. ஆனால், 1950களில் அமெரிக்காவின் ‘உணவின் மூலம் அமைதி’ (Food for Peace – PL 480) திட்டத்தின் கீழ் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட கோதுமைத் தானியங்களுடன் இந்தக் களையின் விதைகளும் கலந்துவந்தன.
இதனால் கோதுமையின் மூலம் பார்த்தீனியம் நாடு முழுவதும் வேகமாகப் பரவியது. விளைநிலங்கள், கால்வாய்கள், மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் புல்வெளிகள், விளையாட்டு மைதானங்கள், சாலைகள், ரயில்பாதை ஓரங்கள், காடுகளின் விளிம்புகள், பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளில் இது பரவலாகக் காணப்படுகிறது.
1955இல் மகாராஷ்டிரத்தின் புணே நகரில் இயற்கைச் சூழலில் இக்களை முதன்முதலில் பதிவுசெய்யப்பட்டது. 1975இல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, சுமார் 50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவை இது ஆக்கிரமித்திருந்தது.
ஆனால், அண்மைக் கால மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் 3 கோடியே 50 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் இது பரவியுள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இக்களை காணப்படுகிறது. குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், பிஹார், சட்டீஸ்கர், டெல்லி, ஹரியாணா, கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதன் பரவல் மிக அதிகமாக உள்ளது.