

பெருநகரங்களில் ரயில் போக்கு வரத்து நிறைய இடங்களில் மேம்பாலங்களின் வழியாக அல்லது சுரங்கங்கள் வழியாக நடைபெறுகிறது. சுரங்கங்கள் தோண்டுவது அல்லது மேம்பாலங்கள் அமைப்பது குறித்தான நிபுணத்துவத்தை, அறிவை அளிப்பது கட்டமைப்புப் பொறியியலின் (structural engineering) ஒரு முக்கியப் பணி.
அதிலும் குறிப்பாக, சுரங்கங்கள் தோண்டுவது என்பது மிக மிகக் கடினமான அதேநேரம் ஆபத்தான வேலையும்கூட. இந்தக் கோணத்தில் பார்க்கும்போது எறும்புப் புற்றுகள் என்பதும் மண்ணுக்கு அடியில் உள்ள சிறிய சுரங்கம்தான். எறும்புகள் தங்களுக்குத் தேவையான வாழ்விடமான புற்றைத் தோண்டும்விதம் கண்டு அறிவியலாளர்கள் வியக்கிறார்கள்.
என்ன சிக்கல்?
மண்ணுக்கு அடியில் புற்றைத் தோண்ட வேண்டும் என்றால் எறும்புகள் சிறிது சிறிதாக மண்துகள்களை அகற்ற வேண்டும். மண்ணுக்கு அடியில் இருக்கும் எல்லா மண்துகளும் ஒரே மாதிரியான தகைவை / இறுக்கத்தை (stress) அடைவதில்லை. சில மண்துகள்கள் மிக அதிக அளவுக்கான தகைவோடு அதிக அழுத்தத்தில் இருக்கும்.
சில மண்துகள்கள் மிகக் குறைவான அளவே தகைவைக் கொண்டிருக்கும். அதிகத் தகைவைக் கொண்டிருக்கும் மண்துகள்கள் ஒன்றோடு மற்றொன்று இணைந்து தொடர் அமைப்பாக இருக்கும். இது விசைச் சங்கிலி (force chains) எனப்படுகிறது. மிக அதிக அளவு தகைவைக் கொண்ட மண்துகளை உருவினால் மொத்தப் புற்றும் இடிந்து விழுந்துவிடும்.
சிறுவயதில் கடற்கரையில் மணல் வீடு கட்டி விளையாடி இருப்போம். அந்த மணல் வீட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தெரியாமல் கைபட்டுவிட்டால் மொத்தமும் சரிந்து விழுந்துவிடும். இதே சிக்கல்தான் எறும்புகள் புற்றைத் தோண்டும்போதும் நிகழும்.