

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் - நெம்மேலி கடலோர ஈரநிலத்தின் 270 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட நீர்ப்பிடிப்புப் பகுதியின் முதன்மை நீர்வழித்தடம் தற்போது அடைக்கப்பட்டுள்ளது.
திருவிடந்தை - வடநெம்மேலி, நெம்மேலி - திருப்போரூர் பாலம் அருகே, சாளுவன்குப்பம் ஆகிய மூன்று இடங்களில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே இப்படி நீர்த்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடலோர ஈரநிலம் உயிர்ப்புடன் இருப்பதற்கு, நன்னீர் கடலுக்குச் செல்வதும், ஓதத்தின்போது கடல்நீர் உள்ளே வருவதும் ஆகிய இருவழி நீரோட்டம் அவசியம்.
இதுகுறித்து அந்தப் பகுதி மீனவர்கள் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களாக இந்த இயற்கை நீர்ப் பரிமாற்றம் தடைபட்டுள்ளது.
இதனால் இறால், நண்டு, மீன் உள்ளிட்ட உயிரினங்களின் இனப்பெருக்கச் சூழல் பாதிக்கப்பட்டு, இந்த ஈரநிலத்தைச் சார்ந்துள்ள மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது.