

ஈரோடு மாவட்டம் எலத்தூர்க் குளம் 206 பறவைகள், 174 பூச்சி இனங்கள், 228 தாவரங்கள் என 695 உயிரினங்களின் உயிர்நாடியாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டின் 3ஆவது பல்லுயிர்ப் பாரம்பரியத் தலமாக செப்டம்பர் 2025இல் தமிழ்நாடு அரசால் பிரகடனப் படுத்தப்பட்ட இந்த இடம், இன்று அரசின் அலட்சியத்தால் அதிகாரபூர்வப் பலகைகூட இல்லாமல் அநாதையாக நிற்கிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அரங்கேறிய சட்டவிரோதப் பறவை-மீன் வேட்டைகள், மர்ம நபர்கள் தீவைத்தது, மது அருந்துதல் போன்றவை போதாதென்று, தற்போது சில மரங்கள் வெட்டப்பட்டு புதர்களும் அழிக்கப்பட்டதால், இனப்பெருக்கக் காலத்தில் பறவைகளின் கூடுகள் சிதைந்து முட்டைகள் நிலத்தில் சிதறிக் கிடக்கும் அவலம் நிகழ்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், வனத் துறையினரிடம் பேசினோம்.
மரங்கள், மூலிகை அழிப்பு
திருப்பூர் இயற்கைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் காமாட்சி “1990இல் வனத் துறையால் எலத்தூர்க் குளத்தில் வளர்த்துப் பாதுகாக்கப்பட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலான உடை (குடைவேலன்), ஊஞ்சல், வேம்பு, வெப்பாலை, கருவேல மரங்களும், அரிய உலர் நில மூலிகைகளும் நிறைந்த அடர்ந்த காட்டின் ஒரு பகுதி புரிதலின்றிச் சேதாரம் செய்து அழிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2023இல் அப்போதைய ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, ‘வனத் துறையால் வளர்க்கப்பட்ட 2,059 மரங்களையும் பறவைகள் நலன் கருதி எக்காரணத்தைக் கொண்டும் வெட்டக் கூடாது’ எனத் திட்டவட்டமாக எழுத்துபூர்வமாக உத்தரவிட்டார்.