எலத்தூர் பல்லுயிர் தலத்தில் பறவைகளுக்கு சிக்கல்!

எலத்தூர் பல்லுயிர் தலத்தில் பறவைகளுக்கு சிக்கல்!

Published on

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரோட்டிலுள்ள எலத்தூர் குளம் உயிரிப் பல்வகைமைச் சட்டம் 2002இன்படி தமிழ்நாட்டின் மூன்றாவது பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டது. இது ஈரோட்டின் முதல் பல்லுயிர் தலமாகவும் விளங்குகிறது. இந்தக் குளத்தில் 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்பட 695 வகையான உயிரினங்கள் வாழ்வது ‘சூழல் அறிவோம்’ குழுவால் பதிவு செய்யப்பட்டுள்ளது. வலசைக் காலத்தில் 10,000க்கும் மேற்பட்ட பறவைகள் இக்குளத்தில் தங்குகின்றன.

தற்போது இங்கு நீர் குறைந்துவரும் நிலையில் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு இரவு நேரங்களில் மீன் பிடிப்பதும் சட்டவிரோதமாக வேட்டையாடுவதும் அதிகரித்துவருகிறது. இந்தக் காரணத்தால், இங்குள்ள பறவைகளின் இனப்பெருக்கத்துக்கும் உயிர்ச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 70க்கும் மேற்பட்ட உள்ளூர் பறவை இனங்கள் இனப்பெருக்கம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

எலத்தூர் பல்லுயிர் மேலாண்மைக் குழுவினர், உள்ளூர் மக்கள் இணைந்து, தொடர்ந்து இவ்விடத்தையும் இங்கு உள்ள பல்லுயிர்களையும் பாதுகாப்பதற்கு முயன்று வருகிறார்கள்.

அதன் ஒருபகுதியாக, சமீபத்தில் எலத்தூர் குளம் அருகே ரோந்து சென்றபோது அங்கு ஒரு நீர்க்காக்கையும் கொக்கும் மர்மமான முறையில் இறந்திருப்பதைக் கண்டுள்ளனர். இரவு நேரத்தில் தடையை மீறி, பெரிய மீன்வலைகளில் சிக்கி அவை இறந்திருக்கலாம் அல்லது வேட்டையில் அடிபட்ட பறவைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தமிழ்நாட்டின் முக்கியமான உயிர்ச்சூழல் நிறைந்த எலத்தூரில் உள்ள பல்லுயிர்களைப் பாதுகாப்பதற்கு, உடனடியாக இங்கு நிரந்தர வனப் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைக் கவனத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கைகளைக் கையாண்டு இந்தப் பல்லுயிர் தலத்தைக் காக்க வேண்டும்.

எலத்தூர் பல்லுயிர் தலத்தில் பறவைகளுக்கு சிக்கல்!
Aattam: புறணி பேசும் ஆணுலகுக்கு அறைவிட்ட அஞ்சலி | திரை தேவதைகள் 03

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in