

தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் பாம்புகள், தமிழ்நாடு வனத்துறை: தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் நஞ்சற்ற, நஞ்சுள்ள பாம்பு வகைகள், அவற்றை அடையாளம் காண்பதற்கான குறிப்புகள், காணப்படும் இடங்கள், வாழ்விடங்கள், உலவும் நேரம் உள்ளிட்ட அனைத்தும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன.
பாம்புகளை அடையாளம் காணத் தெளிவான படங்கள், சரியான தமிழ்ப் பெயர்கள் ஆகியவை இந்த நூலின் முக்கிய அம்சம். மொத்தம் 30 பாம்பு வகைகள் விளக்கப்பட்டுள்ளன. ஒருவேளை பாம்பு கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று அறிவியல் முறைப்படி விளக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டிருக்கும் இந்த நூலை ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன் மாரியப்பன், பாம்புக்கடி வல்லுநர் ந.ச.மனோஜ், ஊர்வனப் பாதுகாவலர் ர.சேக் உசேன் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
சுற்றுச்சூழல் தவறுகளும் பாடங்களும்,
சரவணன் பார்த்தசாரதி, பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044-24332924: மனிதர்களுக்கு மற்ற உயிரினங் களைவிடக் கூடுதலாகப் பகுத்தறிவு இருக்கிறது. எனவே, உலகில் பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படக் காரணமாக இருந்த மனித இனத்துக்கே, உலகில் அனைத்து உயிரினங்களையும் நிலைபெற வைக்க வேண்டிய கடமை இருக்கிறது. அந்த உணர்வோடு மனிதர்கள் செயல்படுகிறோமா, மனிதவளர்ச்சியை முன்வைத்து நாம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்கிற கேள்விகளை எழுப்புகிறார் நூல் ஆசிரியர். அதற்கான தீர்வுகளைத் தரும் வகையில் 50 கட்டுரைகளை வடித்துள்ளார்.
வண்ணத்துப்பூச்சிகள்: அறிமுகக் கையேடு,
ஆர்.பானுமதி, க்ரியா, தொடர்புக்கு: 72999 05950: வண்ணத்துப்பூச்சிகள் குறித்த முதல் கையேட்டை வெளியிட்ட ஆர்.பானுமதி, தற்போது அந்தக் கையேட்டை மேம்படுத்தி மீண்டும் வெளியிட்டுள்ளார். புதிய கையேட்டில் 100 வண்ணத்துப்பூச்சி வகைகள் குறித்த விளக்கம், 272 வண்ணப்படங்களுடன் தரப்பட்டுள்ளது. இந்த நூலில் வண்ணத்துப்பூச்சிக் குடும்பங்களின் சிறப்பு அம்சங்கள், அவற்றின் புழுப்பருவத்தில் உணவாகும் தாவரங்கள், அவை காணப்படும் இடங்கள் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.