

சூரிய ஒளி என்னும் ஆற்றல்தான் புவியில் உயிர்கள் தோன்ற முக்கியக் காரணம். சூரிய ஒளியின் ஆற்றல்தான் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலமாக வேதி ஆற்றலாக மாறுகிறது. கடல் நீரோட்டங்களைத் தீர்மானிப்பதில் சூரிய ஒளி முக்கியப் பங்கு வகிக்கிறது.
இப்படிப் புவியின் பல்வேறு முக்கியப் பண்புகளைச் சூரிய ஒளியின் ஆற்றல்தான் தீர்மானிக்கிறது. இது ஓரளவு உண்மைதான். நமக்குத் தெரியாத இன்னொரு சுவாரசியமான அறிவியல் விஷயமும் இதில் அடங்கியிருக்கிறது.
ஒவ்வொரு விநாடியும் சூரியன் 9௦ பெட்டா ஜூல் அளவுக்கான ஆற்றலைப் புவிக்குத் தருகிறது. அதாவது ஒன்றுக்குப் பின்னால் 15 பூஜ்ஜியங்களைப் போட்டால் வருவதே ஒரு பெட்டா.
இவ்வளவு அதிக ஆற்றலை வாங்கிச் சற்றேறக்குறைய அதே அளவுக்கான ஆற்றலைத் திரும்பவும் அண்டவெளிக்குப் புவி திருப்பி அனுப்புகிறது. சூரியன் கொடுக்கும் 99% ஆற்றலைப் புவி தன்னுள் வைத்துக்கொள்வதே இல்லை.
பிறகு எப்படிப் புவியில் இவ்வளவு செயல்பாடுகள் நடந்தன! நடக்கின்றன? அப்படி என்றால் சூரிய ஒளியின் ஆற்றல் மட்டும் காரணமில்லை. அந்த ஆற்றலின் ‘தரம்’தான் இதற்கு மிக முக்கியக் காரணம். ஓர் ஆற்றலின் தரத்தை ‘என்ட்ரபி’ (Entropy) என்கிற இயற்பியல் அளவால் குறிக்கிறோம்.
என்ட்ரபி என்றால் என்ன? - கண்டிப்பான ஆசிரியரின் வகுப் பறையில் மாணவர்கள் அங்குமிங்கும் ஓடாமல் ஒழுங்கான முறையில் அமர்ந்திருப்பார்கள். ஆனால், விளையாட்டு வகுப்பில் மாணவர்கள் தங்கள் விருப்பம்போல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும், ஒழுங்கற்ற முறையிலும் இருப்பார்கள். ‘ஒழுங்கற்ற முறை’யில் அல்லது சீரற்ற முறையில் இருக்கும் மாணவர்கள் அமர்ந்திருக்கும் வகுப்பறையின் என்ட்ரபி அதிகம்.