செந்நிறமாகும் செழுமை: அழியும் அரிய உள்ளூர் மீன் இனங்கள்

செந்நிறமாகும் செழுமை: அழியும் அரிய உள்ளூர் மீன் இனங்கள்
Updated on: 
3 min read

ஆராய்ச்சியாளா், அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவளக் காப்புமையம், மணிமுத்தாறு தென் தமிழகத்தின் உயிர்நாடி, வற்றாத ஜீவநதி எனப் போற்றப்படும் தாமிரபரணி, இன்றைக்குத் தன் இயல்பைத் தொலைத்துக்கொண்டிருக்கிறது.

பொதிகை மலையின் 2,000 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி, 130 கி.மீ தூரம் பாய்ந்து மன்னார் வளைகுடாவில் சங்கமிக்கும் இந்த ஆறு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் தாகத்தைத் தீர்ப்பதுடன் வேளாண்மைக்கும் ஆதாரமாக விளங்குகிறது.

ஆனால், சமீபத்திய ‘தாமிரபரணி மீன்கள் கணக்கெடுப்பு 2026’ (Tamiraparani Fish Survey) பாபநாசம் முதல் ஸ்ரீவைகுண்டம் வரை நடத்தப்பட்டதில் கிடைத்த முடிவுகள், இந்த ஆற்றின் ஆரோக்கியம் குறித்த கவலைக்குரிய நிலைமையைக் கவனப்படுத்துகின்றன.

ஆற்றின் ஆரோக்கியக் குறியீடு ஓர் ஆற்றின் தூய்மையையும் செழுமையையும் அளவிட அந்த ஆற்றில் வாழும் மீன்களே சிறந்த சான்று. தமிழகத்தின் மொத்த மீன் பன்முகத்தன்மையில் தாமிரபரணியின் பங்கு மட்டும் சுமார் 86%.

தாமிரபரணியின் மேல்மட்டப் பகுதி, மத்தியப் பகுதி, கீழ்மட்டக் கழிமுகப்பகுதி போன்ற பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 125 வகை மீன்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதில் ஆறு இனங்கள் அருகிவரும் நிலையிலும் (Endangered), நான்கு இனங்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையிலும் (Threatened) உள்ளன. குறிப்பாக, உலகில் வேறு எங்கும் காணப்படாத ஆறு ஓரிடவாழ் (Endemic) இனங்களான Horalabiosa joshuai, Garra kalakkadensis உள்ளிட்டவை இங்கு மட்டுமே வாழ்கின்றன. இவை பெரும்பாலும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள் உள்ள மேல்நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.

மூன்று ஆண்டு கணக்கெடுப்பு

கடந்த மூன்று ஆண்டுகளாக பாபநாசம், கல்லிடைக் குறிச்சி, கோபாலசமுத்திரம், திருப்புடைமருதூர், சீவலப்பேரி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஏழு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 43 மீன் வகைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் 38 இன வகைகள் உள்ளூர் இன வகைகள், ஐந்து அறிமுகமான / அயல்நாட்டு மீன்கள். இக்கணக்கெடுப்பு கீழ்க்கண்ட மாற்றங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன:

1. ஸ்ரீவைகுண்டத்தின் வீழ்ச்சி: 2024, 2025ஆம் ஆண்டுகளில் ஸ்ரீவைகுண்டம் பகுதி மீன் வளத்தில் ஒரு முக்கிய மையமாக இருந்தது. 2024இல் இங்கு அதிகப்படியான மீன்கள் பதிவாகின.

குறிப்பாக 2025இல் ஆவணப்படுத்தப்பட்ட மீன்களுடன் ஒப்பிட்டால், 2026இல் வெறும் 10 சதவீத மீன்கள் மட்டுமே பதிவாகி உள்ளன. இது 90 சதவீத வீழ்ச்சி. மணல் சமநிலையின்மை, ஆக்கிரமிப்பு மீன்களின் ஆதிக்கம், அதிகரித்த மனிதத் தலையீடுகள் இந்தத் திடீர் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம்.

Loading content, please wait...

X